சத்தீஸ்கரில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத இயக்கம் பற்றிய தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி, நக்சல்களால் ஒருவர் கொல்லப்பட்டதாக திங்கள்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவலின்படி, பைராம்கர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கேஷாமுண்டி கிராமத்தில் வசிக்கும் பத்ரு சோதி(40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள் அவரது வீட்டில் கோடரியால் தாக்கினர், அதன்பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று இங்குள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும், திங்கள்கிழமை காலை போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும், அந்தப்பகுதியில் இறந்தவர் துரோகி என்று மாவோயிஸ்ட் குழுவால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் கண்டெடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
2011-ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாவோயிஸ்ட் எதிர்ப்பு இயக்கத்தில் சோதி தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகவும், சட்டவிரோத சிபிஐ (மாவோயிஸ்ட்) தொடர்பான தகவல்களை கசியவிடுவதில் ஈடுபட்டதாகவும் மாவோயிஸ்டுகள் துண்டுப்பிரசுரத்தில் கூறியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஜனவரி 16 ஆம் தேதி, பிஜாப்பூரில் உள்ள மிர்தூர் பகுதியில் 48 வயது நபர் காவல் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார்.
பிஜாப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் கடந்த ஆண்டு மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்களில் 68 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.