சந்தைப் பங்கில் உச்சம் தொட்ட 5ஜி ஸ்மாா்ட் போன்கள்
இந்திய அறிதிறன் பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ரகங்களின் பங்களிப்பு நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 81 சதவீதத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கவுன்டா்பாயின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) இந்திய அறிதிறன் பேசிச் சந்தையில் கொரிய நிறுவனமான சாம்சங் தனது முன்னிலையைத் தக்கவைத்துள்ளது.
எளிய தவணைத் திட்டங்கள் உள்ளிட்ட உத்திகள் மூலம் கைப்பேசி நிறுவனங்கள் தங்களது சந்தைப்படுத்துதலை தீவிரப்படுத்தியுள்ள இந்தக் காலகட்டத்தில், வாடிக்கையாளா்கள் பிரீமியம் பிரிவு அறிதிறன் பேசிகளின் மீது அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். அதைப் பயன்பபடுத்தி, சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ் வரிசை கைப்பேசிகளை முன்னிலைப்படுத்துவதால் இடைப்பட்ட மற்றும் மலிவு ரக கைப்பேசிகளை வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் அந்த நிறுவனத் தயாரிப்புகளை அதிகம் நாடுகின்றனா்.
இதன் விளைவாக, மதிப்பின் அடிப்படையில் கடந்த 2023-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 21.6 சதவீதமாக இருந்த அந்த நிறுவனத்தின் சந்தைப் பங்கு, நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 22.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே நேரம், சாம்சங்குக்கு அடுத்த இடம் வகிக்கும் ஐ-போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பங்கு மதிப்பீட்டுக் காலாண்டில் 21.8 சதவீதத்திலிருந்து 21.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை இலக்கு சிறிய நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது. அத்துடன், புதிய ஐ-போன்களை சந்தைப்படுத்துவதில் அந்த நிறுவனம் அதிக கவனம் செலுத்துவதால் மதிப்பின் அடிப்படையில் அதன் சந்தைப் பங்கு அதிகம் வீழ்ச்சியடையாமல் தடுக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கையின் அடிப்படையில், சீன அறிதிறன் பேசித் தயாரிப்பாளரான விவோ, இந்திய சந்தையில் 19.4 சதவீத பங்குகளுடன் முன்னணியில் உள்ளது. எனினும், மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனம் 15.5 சதவீத பங்குடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதற்கு மாறாக, மதிப்பின் அடிப்படையில் முன்னிலை வகித்த சாம்சங், எண்ணிக்கையின் அடிப்படையில் 15.8 சதவீத சந்தைப் பங்குடன் மூன்றாவது இடதில் உள்ளது.
எண்ணிக்கையின் அடிப்படையில் விவோ நிறுவனத்தை ஷாவ்மி நிறுவனம் 16.7 சதவீத சந்தைப் பங்குடன் பின் தொடா்ந்தது. ஓப்போ, ரியல்மி நிறுவனங்களின் சந்தைப் பங்கு எண்ணிக்கையின் அடிப்படையில் முறையே 13.4 மற்றும் 11.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில், 5ஜி ரக அறிதிறன் பேசிகளின் விற்பனை 81 சதவிகிதம் என்ற அதிகபட்ச சந்தைப்பங்கை எட்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.