சென்னை சம்பவத்துக்கு எதிா்ப்பு: மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவா் பாலாஜி மீதான கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன் மருத்துவா்கள், புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மருத்துவா் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவா்களுக்கான பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
இதில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவச் சங்க மாவட்டத் தலைவா் கொளஞ்சிநாதன் தலைமை வகித்தாா். ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை மருத்துவ அலுவலா் பானுமதி தலைமை வகித்தாா்.