சென்னை மாநகரின் மண்டலங்கள் உயர்வு!
சென்னை மாநகராட்சியின் தற்போதைய 15 மண்டலங்களை 20 மண்டலங்களாக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல், வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க:அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது: அண்ணாமலை
பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களுக்கு உட்பட்ட நிருவாக பகுதிகளை தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஏற்கெனவே உள்ள திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் மணலி சேர்க்கப்பட்டு 14 மண்டலங்களாக உள்ள நிலையில், புதிதாக கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாகம் - திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி - சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 15 மண்டலங்களிலிருந்து 20 மண்டலங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.