ஜன. 31ல் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!
2025-26 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குவதாக நாடாளுமன்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற செய்திக்குறிப்பில்,
'2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் வருகிற ஜன. 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற மக்களவையில் ஜன. 31 காலை 11 மணிக்கு, இரு அவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். மக்களவை, மாநிலங்களவை என இரு அவையைச் சேர்ந்த உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்வார்கள்.
குடியரசுத்தலைவர் உரைக்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு மாநிலங்களவை நடவடிக்கைகள் தனியே தொடரும். குடியரசுத்தலைவர் உரை மீது பிப். 3, 4, 5 ஆகிய நாள்கள் விவாதம் நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அமலாக்கத் துறை முன்பு திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!
பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடையும். இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.