ஜம்முவில் கனமழை: பாறை உருண்டதில் தாய், மகன் பலி!
ஜம்முவில் மூன்றாவது நாளாகப் பெய்துவரும் கனமழைக்கு தாய், மகன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்முவின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் 270 கி.மீ நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மௌங்கரி அருகே ஒரு மலையிலிருந்து பாறை உருண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஷானோ தேவி (50) மற்றும் அவரது மகன் ரகு(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் பகுதியில் உள்ள உஜ் ஆற்றிலிருந்து 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை கூட்டுக் குழுவால் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்முவில் உள்ள நிகி தாவி பகுதியில் இன்று காலை காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரால் கூட்டு நடவடிக்கையில் ஓட்டுநர் ஒருவரும் மீட்கப்பட்டார்.
வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராகி நல்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக படோட்-தோடா சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பதேர்வா-சம்பா, முகல் சாலை மற்றும் சிந்தன் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.