தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
`தந்தையின் விவசாயத்தை கவனிக்க பரோல் வேண்டும்' - கொலை குற்றவாளிக்கு 90 நாள் பரோல் வழங்கிய கோர்ட்
குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோர்ட் பரோலில் அனுப்புவதுண்டு. பரோலில் வரும்போது எந்த வித தவறும் செய்யாத பட்சத்தில் வருடத்தில் ஒரு முறை பரோலில் வர முடியும். கர்நாடகா மாநிலம், ரமணகாரா மாவட்டத்தில் உள்ள சித்தேவரஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 11 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் 11 ஆண்டுகளில் ஒருமுறை கூட பரோலில் வெளியில் வரவில்லை. இதையடுத்து தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி சந்திரா சிறை அதிகாரியிடம் விண்ணப்பித்தார். அவர் தனது மனுவில் தனது தந்தையின் விவசாயத்தை கவனிக்க வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை. எனவே தனக்கு பரோல் கொடுக்கும்படி கேட்டார்.
ஆனால் அதனை சிறை அதிகாரி நிராகரித்துவிட்டார். இதையடுத்து சந்திரா உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்த போது தந்தையின் விவசாயத்தை கவனிக்க ஆள் இல்லை, எனவே தனக்கு பரோல் வழங்கவேண்டும் என்று சந்திரா தெரிவித்தார். இதையடுத்து 11 ஆண்டுகள் பரோலில் செல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் சந்திராவிற்கு 90 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரர் இதற்கு முன்பு பரோல் பெறவில்லை என்பதால் அவர் பரோல் பெற தகுதியானவர் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
பரோலில் செல்லும் மனுதாரருக்கு சிறை அதிகாரி வழக்கமாக விதிக்கும் நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்றும், வாரத்தில் ஒரு நாள் உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்றும், பரோல் காலத்தில் எந்தவித குற்றத்திலும் ஈடுபடக் கூடாது என்றும், அப்படி குற்றத்தில் ஈடுபட்டால் பரோல் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.