இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
தவறான பிரமாணப் பத்திரம்... அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் குற்ற வழக்கு!
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டு தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும், அவரின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரியும் வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அப்போதே புகார் மனு அனுப்பியிருந்தார். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ராமமூர்த்தி.
இதையடுத்து, கே.சி.வீரமணி மீது `மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ’ பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆனாலும், `இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினார் ராமமூர்த்தி.
இந்த நிலையில்தான் 25-7-2024 அன்று கே.சி.வீரமணியின் பிரமாணப் பத்திரத்தில் தீவிர குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவுப் பிறப்பித்தது தேர்தல் ஆணையம். இதைத் தொடர்ந்தே, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வீரமணிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை வரும் 26-ம் தேதி வருகிறது. ஒருவேளை குற்றச்சாட்டு நிரூபணமானால் வீரமணிக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துகூட தண்டனையாக விதிக்கப்படலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். கடந்த `01.4.2016 முதல் 31.3.2021 வரையில் 654 மடங்கிற்கு சொத்துகள் உயர்ந்துள்ளதாக’ கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது. பிரமாணப் பத்திரத்திலும் சொத்து விவரங்களை மறைத்ததாகத்தான் தேர்தல் ஆணையத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார் வீரமணி.