மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
திருவண்ணாமலை தீபத் திருவிழா: 42 லட்சம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவையொட்டி, 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
42 லட்சம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்: கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. நிகழாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்களுக்கு என மொத்தம் 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது, கூடுதலாக தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். நெரிசலைத் தவிர்க்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் சேகர்பாபு.
ஆய்வுக் கூட்டத்தில் பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
பரணி தீபத்தைக் காண வரும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்களுக்கு ஒரே மாதிரியான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. நிகழாண்டு இரண்டாம் பிரகாரத்தில் இருந்து பரணி தீபத்தைக் காண ஒரு வண்ணத்திலும், மூன்றாம் பிரகாரத்தில் இருந்து காண மற்றொரு வண்ணத்திலும் அனுமதிச் சீட்டுகளை அச்சடித்து வழங்க வேண்டும்.
தீபத் திருவிழாவைக் காண தவறான அனுமதிச் சீட்டுகளுடன் வரும் பக்தர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.