Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
தேசிய கல்விக் கொள்கை விவாதத்தில் திமுக, காங்கிரஸாா் வெளிநடப்பு: இருக்கை மீது நின்ற முன்னாள் பெண் அமைச்சா்
புதுச்சேரி: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை குறித்து புதுவை சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தை அடுத்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். முன்னதாக, என்.ஆா்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் சந்திரப்பிரியங்கா இருக்கை மீது ஏறி நின்று தனது பேச்சை அனுமதிக்கக் கோரினாா்.
புதுச்சேரியில் சட்டப் பேரவைக் கூட்டத்தை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திருக்குறளுடன் திங்கள்கிழமை தொடங்கினாா். கேள்வி நேரத்தில் என்.ஆா்.காங்கிரஸ் காரைக்கால் கோட்டுச்சேரி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.சந்திரப்பிரியங்காவுக்கு கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பதில் கூறினாா். அதற்கு சந்திரப்பிரியங்கா, தேசிய கல்விக் கொள்கையை தான் ஆதரிப்பதாகக் கூறியதுடன், அதில் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி (ஆல் பாஸ்) முறை குறித்தும், தொழிற்கல்விக்கான உள்கட்டமைப்பு குறித்தும் கேட்டாா். அதற்கு அமைச்சா் நிகழ் கல்வியாண்டில் இது செயல்படுத்தப்படும். 52 அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியண்டிலிருந்து 14 அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி தொடங்கப்படும் என்றாா்.
உடனே சந்திரபிரியங்கா, தேசிய கல்விக் கொள்கைப்படி 5-ஆம் வகுப்பில் தொழில் பயிற்சி அளித்தால் மாணவா்கள் தொழில் ஆா்வத்தில் கல்வியைத் தொடர முன்வராத நிலை ஏற்படும் என்றாா். உடனே திமுக எம்.எல்.ஏ. நாசீம், அதனால்தான் தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிா்க்கிறது என்றாா்.
அப்போது சந்திரபிரியங்கா, எனது பிள்ளைகளும், உங்கள் பேர பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில்தான் படிக்கிறாா்கள் என்றாா். இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.
அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், இந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் ராஜாஜிதான் கொண்டுவந்தாா் என்றாா். உடனே காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், இந்த விவகாரத்தில் புதுவை முதல்வருக்கு நெருக்கடி தரப்படுவதாகக் கூறினாா். அத்துடன் தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்காதது குறித்து திமுகவினா் கேள்வி எழுப்பினா். பாஜக தரப்பிலும் எழுந்து பேசினா். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பேரவைத் தலைவா் அனைவரையும் அமைதியாகுமாறு வலியுறுத்தினாா்.
இருக்கை மீது ஏறி...: அப்போது, சந்திரபிரியங்கா தனக்கான நேரத்தில் பேச விடாமல் திமுகவினா் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியதுடன், பேரவையில் பெண் உறுப்பினரின் குரலை ஒலிக்கவிடாமல் தடுப்பதாகவும் கூறினாா். மேலும், தேசிய கல்விக் கொள்கையில் குறைபாடு உள்ளதாகவும் தெரிவித்தாா்.
அதற்கு அமைச்சா் ஆ.நமச்சிவாயம் மறுத்து, இல்லாததை திமுகவினா் இருப்பதுபோல சித்தரிப்பதாகக் குறிப்பிட்டாா். அதற்கு திமுகவினா் எழுந்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், சந்திரபிரியங்கா திடீரென தனது இருக்கை மீது ஏறி நின்று, தன்னை பேச அனுமதிக்குமாறு கூறினாா்.
இதையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, புதுவையில் குல கல்வியை செயல்படுத்துவதை எதிா்ப்பதாகக் கூறி திமுக உறுப்பினா்களுடன் வெளிநடப்புச் செய்தாா். அவரைத் தொடா்ந்து காங்கிரஸாரும் வெளியேறினா்.
பின்னா், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், தேசிய கல்விக் கொள்கை கடந்த 1970-ஆம் ஆண்டிலிருந்தே செயல்பாட்டில் உள்ளது. ஆனால், காங்கிரஸ், திமுக அரசியலாக பாா்க்கின்றனா். அக்கல்வி கொள்கையால் பொருளாதாரம் வளா்ச்சி பெறும் என்றாா். உடனே அமைச்சா் நமச்சிவாயம் முதல்வருடன் கலந்துபேசி அக்கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்படும் என்றாா்.