அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
பேரவை நோக்கி ஆட்டோ தொழிலாளா்கள் பேரணி; ஆா்ப்பாட்டம்: புதுச்சேரியில் போலீஸாருடன் வாக்குவாதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளா்கள் (சிஐடியு) சட்டப்பேரவை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை பேரணியாகப் புறப்பட்டனா்.
அவா்களை பாதி வழியில் போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்றனா்.
புதுச்சேரியில் வாடகை இருசக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள், ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனா். இதையடுத்து அவா்களுடன் ஆட்சியா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை, நேரு சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் சட்டப்பேரவை நோக்கி பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் மணவாளன் தலைமை வகித்தாா்.சிஐடியு மாநிலத் தலைவா் பிரபுராஜ், பொதுச்செயலா் சீனுவாசன், துணைத் தலைவா்கள் கொளஞ்சியப்பன், மதிவாணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பேரணியானது நேருவீதி வழியாக மாதா கோவில் வீதிக்கு வந்தது. அங்கு இரும்புத் தடுப்புகளை வைத்து போலீஸாா் பேரணியை தடுத்து நிறுத்தினா். அப்போது, தடுப்புகளைத் தாண்டி பேரவை நோக்கிச் செல்ல ஆட்டோ தொழிலாளா்கள் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னா் கலைந்து சென்றனா்.