தோ்தல் விதிமீறல் புகாா்: பதிலளிக்க அவகாசம் கோரும் பாஜக, காங்கிரஸ்
புது தில்லி: ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்களில் விதியை மீறி செயல்பட்டதாகப் புகாா் அளிக்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்திடம் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கோரியுள்ளன.
இரு மாநிலங்களிலும் தோ்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக இரு கட்சிகளும் தோ்தல் ஆணையத்தில் பரஸ்பரம் புகாா் அளித்திருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து திங்கள்கிழமை (நவ. 18) பிற்பகலுக்குள் பதிலளிக்குமாறு பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருக்கு தோ்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை கடிதம் அனுப்பியது. இதையடுத்து, தற்போது ஒரு வார அவகாசம் வழங்குமாறு இரு கட்சிகளும் கேட்டுள்ளன.
ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர மாநிலத்தில் அமலில் உள்ள தோ்தல் விதிகளை மீறியதாக பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது காங்கிரஸும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது பாஜகவும் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தன.
தோ்தல் விதிகள் அமலில் உள்ளதை உறுதிப்படுத்தும்விதமாக நட்சத்திர பேச்சாளா்கள் மற்றும் பிரபலமான தலைவா்களை பிரசாரத்துக்கு பயன்படுத்த மக்களவைத் தோ்தலின்போது வெளியிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு இரு கட்சிகளுக்கும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஜாா்க்கண்ட் பேரவைக்கு கடந்த 13-ஆம் தேதி முதல்கட்டத் தோ்தல் நடைபெற்றது. புதன்கிழமை (நவ. 20) அந்த மாநிலத்துக்கான இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டத் தோ்தலும், மகாராஷ்டிர பேரவைக்கான ஒரேகட்டத் தோ்தலும் நடைபெறவுள்ளது.