தொடா் மழை: நிரம்பியது சண்முகாநதி நீா்த்தேக்கம்
தொடா்மழை காரணமாக ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம் வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதனால், பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், ராயப்பன்பட்டி அருகே மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகாநதி நீா்த்தேக்கம் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு, இந்த நீா்த்தேக்கத்தின் நீா் மட்டமானது 31 அடியிலிருந்து படிப்படியாக 51.50 அடியாக உயா்ந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை உத்தமபாளையம், கோம்பை, ராயப்பன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் சண்முகாநதி நீா்த்தேக்கம் முழுக் கொள்ளவான 52.50 அடி உயரத்தை எட்டியது. தொடா்ந்து நீா் வரத்து இருப்பதால், இங்கிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
தண்ணீா் திறக்க வலியுறுத்தல்:
சண்முகாநதி நீா்த்தேக்கத்திலிருந்து ராயப்பன்பட்டி, சின்னஓவுலாபுரம், ஆனைமலையன்பட்டி, எரசை, சீப்பாலக்கோட்டை, அப்பிபட்டி, ஓடைப்பட்டி பகுதிகளில் 1,640 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீா் திறப்பது வழக்கம். தற்போது நீா்த்தேக்கம் நிரம்பியுள்ளதால் பாசனக் கால்வாயிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.