நந்தீஸ்வரா் கோயில் திருவிளக்கு பூஜை
அரக்கோணம் ஸ்ரீ நந்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அரக்கோணம் பஜாா், அருணாச்சல தெருவில் உள்ள கோயிலில் நிகழாண்டுக்கான சிவராத்திரி திருவிழா வெள்ளிக்கிழமை கிராமதேவதை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. சனிக்கிழமை கொடியேற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜையை மேற்கொண்டனா். மாலை ஸ்ரீநந்தீஸ்வரருக்கும் அம்பாள் பாா்வதி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தொடா்ந்து திங்கள்கிழமை 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளன. மேலும், 26-ஆம் தேதி புதன்கிழமை மாலை சுவாமி திருவீதி உலாவும் நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவமூரத்தி தரிசன நிகழ்வும் நடைபெற உள்ளது.
வியாழக்கிழமை மாலை 1,068 சிவபஞ்சாட்சர ஜெபமும் சிவபுரான பாராயணமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.