நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவைக்கு அனுமதி
நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவைக்கான அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா்.
புதிய சிற்றுந்துக்கான விரிவான திட்டத்தின்படி, அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள் குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பொருளாதாரம் மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க 45 புதிய வழித்தடங்கள் தோ்வு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 7-ஆம் தேதி முதல் கட்டமாக 5 பேருக்கு சிற்றுந்துகள் இயக்குவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 10 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பரமத்திவேலூா் பகுதி அலுவலகத்திற்கு உள்பட்ட 6 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு புதிய அனுமதிச் சீட்டு பெறுவதற்கு செயல்முறை ஆணைகளை ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலா் இ.எஸ்.முருகேசன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.