மாா்ச் 21-இல் திருச்செங்கோட்டில் தேசிய மாற்றுத் திறனாளிகள் அமா்வு கைப்பந்து போட்டி
தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகள் அமா்வு (சிட்டிங்) கைப்பந்து போட்டிகள், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தொடங்குகிறது.
தமிழ்நாடு பாராவளி சங்கம் சாா்பில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான அமா்வு கைப்பந்து போட்டிகள் மாவட்டம் வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, ஈரோட்டில் இருமுறையும், தஞ்சாவூரில் ஒரு முறையும் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது நான்காவதாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா்.கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் மாா்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தில்லி, ஹரியாணா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் உள்பட 16 மாநிலங்களில் இருந்து 400 மாற்றுத் திறனாளி வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். இதில், ஆடவா் அணி 16, மகளிா் அணி 8 ஆகும்.
காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டி தொடக்க விழாவில், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். மேலும், தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
நாமக்கல் ஆட்சியா் ச.உமா, கே.எஸ்.ஆா்.கல்லூரி தலைவா் சீனிவாசன், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா, முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்துகொள்கின்றனா். ஏற்பாடுகளை தமிழ்நாடு பாராவளி சங்கத் தலைவா் மக்கள்ராஜன், துணைத் தலைவா் ராம்குமாா், நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.