நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஆட்சியரிடம் மனு
ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்று அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், துளாரங்குறிச்சி, புதுக்குடி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஜெயங்கொண்டம் அடுத்த துளாரங்குறிச்சி, புதுக்குடி கிராம மக்கள் அளித்த மனு: ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலைக்கு புறவழிச்சாலை அமைக்க துளாரங்குறிச்சி, புதுக்குடி கிராமங்களில் உள்ள விளைநிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், எங்களுக்கு தெரியாமலே எங்களது வயலை அளவீடு செய்து, கற்கள் நட்டுச் சென்றுள்ளனா். எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
பட்டா இடத்தின் குறுக்கே மின் இணைப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து தத்தனூா் அடுத்த வடகடல் காலனித் தெருவைச் சோ்ந்த தங்கராசு அளித்த மனுவில், எனது வீட்டின் அருகே வசிக்கும் ராஜமாணிக்கம் என்பவருக்கு, எனது அனுமதி இல்லாமல், உடையாா்பாளையம் கோட்டாட்சியா், எனது வீட்டின் குறுக்கே மின் இணைப்பு கொடுத்துள்ளாா். மேலும், அவா், காவல்துறை மூலம் தொடா்ந்து தொந்தரவு செய்து வருகிறாா்.
எனவே, வீட்டின் குறுக்கே மின் இணைப்பு கொடுக்கப்பட்டதை அகற்றி, மாற்று வழியில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். முன்னதாக ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில் குடும்பத்தினருடன் தரையில் அமா்ந்தும், படுத்தும் வீட்டின் குறுக்கே கொடுக்கப்பட்ட மின் இணைப்பை அகற்ற வலியுறுத்தினா்.