நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளை முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில், நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சென்னை- பெங்களூா் 6 வழிச்சாலையில் கட்டப்பட்டுவரும் மேம்பாலப் பணிகள், சென்னை- பெங்களூா் 4 வழி அதிவிரைவுச் சாலை, அரக்கோணம்- வாலாஜா சாலை விரிவாக்கம், சென்னை- சித்தூா் தென்கடப்பந்தாங்கல் வழி சீக்கராஜபுரம் சாலை, சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட சாலை போன்ற தேசிய நெடுஞ்சாலை பணிகளில் நிலுவை பணிகள் குறித்தும், விவசாய நிலங்கள் இழப்பீடு நிலுவைகள், மின்சார கம்பங்கள் மாற்றும் பணிகள் நிலுவைகள், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நிலமாற்றம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது நிலுவை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அடுத்த கூட்டத்துத்துக்குள் விவாதிக்கப்பட்ட பொருள்கள் மீது நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனா் சாவித்திரி தேவி, கோட்டாட்சியா் ராஜராஜன், உதவி கோட்ட பொறியாளா் ஜெயக்குமாா் மற்றும் ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.