எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
``பணத்தை கேட்டால் பிணம்தான்... மிரட்டும் அமைச்சரின் உதவியாளர்'' - எஸ்.பி-யிடம் புகார் அளித்த பெண்
மயிலாடுதுறை சின்ன கண்ணாரத் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரான வேதா ஸ்ரீநிவாஸ் என்பவர்மீது ராணிப்பேட்டை எஸ்.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அந்த மனுவில், ``எனக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். நானும் எம்.பி.ஏ வரை படித்துவிட்டு 2013 முதல் 2019 வரை சிங்கப்பூரில் டி.ஹெச்.எல் என்ற தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளத்துக்கு வேலைப் பார்த்து வந்தேன். 2019-ம் ஆண்டு அந்த வேலையை விட்டுவிட்டு செட்டில்மெண்ட் தொகை ரூ.24 லட்சத்துடன் சொந்த ஊரில் தொழில் தொடங்குவதற்காக வந்தேன்.
இந்த நிலையில்தான் முகநூல் (ஃபேஸ்புக்) மூலமாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் நண்பராக அறிமுகமானார். தி.மு.க பிரமுகர் எனவும், கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் உதவியாளர் எனவும், அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தியின் நெருங்கிய நண்பர் எனவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஸ்ரீநிவாஸ், அமைச்சர் மற்றும் அமைச்சரின் மகனுடன் சேர்ந்து இருக்கும் அவரின் புகைப்படங்களையும் காட்டினார்.
அதோடு, ராணிப்பேட்டை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே தனக்குச் செல்வாக்கு இருப்பதாகவும், நிறையத் தொழில் செய்து வருவதாகவும், வியட்நாமில் `GO GREEN’ என்ற லெதர் தொழிற்சாலைக்கு அவர்தான் சி.இ.ஓ எனவும் ஸ்ரீநிவாஸே என்னிடம் கூறினார்.
இதையடுத்து, ராணிப்பேட்டையில் புதிதாக அகர்பத்தி பவுடர் இறக்குமதி தொழில் செய்யத் திட்டம் இருப்பதாகக் கூறிய ஸ்ரீநிவாஸ், என்னை பங்குதாரராகச் சேர்த்துகொள்வதாகக் கூறினார். முன்பணமாக ரூ.5 லட்சம் கேட்டார். நானும், என் தோழி ஒருவரும் சேர்ந்து கடந்த 2021 ஜூலை மாதம், அந்தத் தொகையை அவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தோம். அதன் பிறகு `தொழில் வளர்ச்சிக்காக கார் ஒன்றை புதிதாக வாங்க வேண்டும்’ என்று கூறியும் ரூ.62 ஆயிரம் வாங்கினார்.
இதையடுத்து, அகர்பத்தி தொழிலில் கொஞ்சம் பிரச்னை இருப்பதாகக் கூறிய ஸ்ரீநிவாஸ், `கைத்தறித்துறை அமைச்சரின் மூலமாக ஏரியைத் தூர்வாரும் டெண்டர் எடுத்து தொழில் செய்யலாம். இதில் அகர்பத்தி தொழிலை விடவும் நல்ல லாபம் கிடைக்கும். இதற்காக ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. ரூ.20 லட்சம் கொடுத்தால், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக தந்து விடுகிறேன்’ என்று கூறினார்.
நம்பிக்கை அடிப்படையில் நானும் ரூ.19.50 லட்சம் பணத்தை கடனாக வாங்கி, ஸ்ரீநிவாஸ் வங்கிக் கணக்கிற்கே அனுப்பி வைத்தேன். இதுவரை என்னிடம் இருந்து ரூ.41.20 லட்சத்தை ஏமாற்றியுள்ளார் ஸ்ரீநிவாஸ்.
இந்த நிலையில், நான் தொழில் தொடர்பாக கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி வந்தார். எனக்குக் கடன் கொடுத்தவர்களும் பணத்தை திரும்பக் கேட்க ஆரம்பித்தார்கள். இதனால், கடந்த செப்டம்பர் 20-ம் தேதி ஸ்ரீநிவாஸை தொடர்புகொண்டு என்னுடைய பணத்தை திரும்ப கேட்டேன். அதற்கு அவர், `உனக்கு ஒரு ரூபாய்க்கூட கொடுக்க முடியாது. பணம் கேட்டு ராணிப்பேட்டை பக்கம் வந்தால் பிணமாகத்தான் போவாய்’ என மிரட்டினார். எனவே, ஸ்ரீநிவாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் இருந்து என்னுடைய ரூ.41.20 லட்சம் பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்தப் பெண்.
இதையடுத்து, இந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி கிரண் ஸ்ருதி.
இந்தப் புகார் குறித்து வேதா ஸ்ரீநிவாஸிடமே விளக்கம் கேட்டோம். ``இது பிசினஸ் கம்ப்ளைன்ட். கட்சியில் என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காத ஒருசிலரின் தூண்டுதல் காரணமாக இப்படியான புகார்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் யாரையும் மிரட்டவில்லை. இதற்கு முன்பு அதுபோன்ற புகார்களும் என் மீது வந்ததில்லை. நான் அமைச்சருடன் இருப்பதாலும், அவரின் பெயரையும் சேர்த்து கெடுக்க வேண்டும் என்று பொய்ப் புகார் கொடுத்திருக்கின்றனர். என் தரப்பு வழக்கறிஞர் மூலமாக சட்டப்படி இந்த புகாரை எதிர்கொள்ளப் போகிறேன்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb