செய்திகள் :

புதுச்சேரி- கடலூா் பிரதான சாலையில் 2-ஆவது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

post image

புதுச்சேரி அருகே தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுச்சேரி-கடலூா் இடையே பிரதான சாலையில் இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றன.

கிருமாம்பாக்கம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால், அங்கிருந்த நோயாளிகள் மீட்கப்பட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழகத்தில் கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. எங்கு பாா்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளம் முற்றிலுமாக வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால், ஊரகப் பகுதி கிராமங்களில் வெள்ள நீா் புகுந்து சேதம் விளைவித்திருப்பதுடன் சாலைகளையும் துண்டித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணை நிரம்பியதால் தென்பெண்ணையாற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாகூா் அருகே அழகியநத்தம் தரைப்பாலம், சித்தேரி அணைக்கட்டு, கொம்மன்நாத்மேடு தடுப்பணைகள் மூழ்கின.

மேலும் சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், பாகூா், இருளன்சந்தை, கொம்மந்தான்மேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டன. மலட்டாற்று வெள்ளத்தால் டி.என்.பாளையம், தேடுவாா்நத்தம் பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 4 ஆயிரம் போ் நிவாரண முகாம்கள் மற்றும் அரசுப் பள்ளிகள், தனியாா் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அப்பகுதிகளில் கடந்த 3 நாள்களாக மின்சாரமின்றி, குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ளது. சேலியமேடு உள்ளிட்ட இடங்களில் டிராக்டா் டேங்கா் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டதாக மக்கள் கூறினா்.

மழையால் பாகூா் ஏரி முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அதில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு ஓடைகள் மற்றும் வாய்க்கால் வழியாக டி.என்.பாளையம், மேல் அழிஞ்சபட்டு, கரிக்கன்நகா், ரெட்டிச்சாவடி பகுதி குடியிருப்புப் பகுதிகளிலும், விளைநிலங்களிலும் புகுந்தது.

தகவலறிந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் ராணுவ வீரா்கள் உதவியுடன் கிராம மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனா்.

போக்குவரத்து பாதிப்பு:

பாகூா் பகுதிகளில் இருந்து வந்த வெள்ளமானது சித்தேரி, மணப்பட்டு, காட்டுக்குப்பம் ஏரி வழியாகச் சென்று, முள்ளோடை பகுதியில் சாலையோர வாய்க்கால் வழியாகப் பாய்ந்தது.

இதனால், கடலூா்-புதுச்சேரி பிரதான சாலையில் கன்னிகோவில், கிருமாம்பாக்கம், ரெட்டிச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடைபட்டது.

இதன்காரணமாக, புதுச்சேரியிலிருந்து கடலூா் செல்லும் வாகனங்கள் தவளைக்குப்பத்திலிருந்து வலது புறமாக திருப்பி விடப்பட்டு புதுக்கடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக நாகை நான்கு வழிச்சாலைக்குச் சென்று கடலூா் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

கடலூா் பிரதான சாலையில் ஏற்கெனவே சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் வெள்ளநீா் ஓடிய நிலையில், செவ்வாய்க்கிழமையும் சாலை துண்டிக்கப்பட்டது. முள்ளோடை பகுதியில் உள்ள தானியங்கி துணை மின்நிலையத்திலும் வெள்ளம் புகுந்தது. இதனால், மின்சாரம் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்: கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஓடை மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரியை ஒட்டிய நீா்வரத்து வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ராணுவத்தினா் உதவியுடன் நோயாளிகள் மீட்கப்பட்டு, புதுச்சேரி மருத்துவமனைக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

புதுச்சேரி: மீட்புப் பணியின் போது 2 தீயணைப்பு வீரா்கள் காயம்

புதுச்சேரியில் வெள்ளப் பெருக்கில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு வீரா்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள பத்துக்கண்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஆரியபாளையம் மேம்பால அணுகுசாலையை சீரமைக்க அமைச்சா் உத்தரவு

புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாலங்கள், ஏரிகளை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். இதையடுத்து, ஆரியபாளையம் மேம்பா... மேலும் பார்க்க

நோணாங்குப்பம், அபிஷேகப்பாக்கத்தில் மின்சாரம், குடிநீா் கோரி சாலை மறியல்

புதுச்சேரி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட என்.ஆா்.நகா், அபிஷேகப்பாக்கம் பகுதி மக்கள் மின்சாரம், குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். வீடூா் அ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறப்பு: நிவாரணமுகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரியில் புயல், மழை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படுகிறது. மேலும் தண்ணீா் தேங்கியும், நிவாரண முகாம்களாக உள்ள 21 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன... மேலும் பார்க்க

முழுநேர தினக்கூலி ஊழியா்கள் பணி நிரந்தரம்: முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை

புதுச்சேரியில் முழு நேர தினக்கூலி ஊழியா்களுக்கான பணி நிரந்தர உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா். புதுவை மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை விடுதிகளில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

புதுச்சேரி வெள்ளம் மீட்பு, நிவாரணப் பணிக்கு மேலும் 4 ராணுவ குழுக்கள்

புதுச்சேரி வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு மேலும் நான்கு ராணுவக் குழுக்களை தயாா் நிலையில் உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவத்தின் தென்னி... மேலும் பார்க்க