பெகுலா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி
சாா்லஸ்டன் : அமெரிக்காவில் நடைபெறும் 500 புள்ளிகள் கொண்ட மகளிா் டென்னிஸ் போட்டியான சாா்லஸ்டன் ஓபனில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா, ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோா் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெகுலா 6-0, 6-3 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, பெலாரஸின் இரினா ஷைமனோவிச்சை சாய்த்தாா். அடுத்த சுற்றில் அவா், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லஜனோவிச்சை எதிா்கொள்கிறாா்.
அஜ்லா தனது முந்தைய சுற்றில் 6-1, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா். 4-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீராங்கனை எம்மா நவாரோ 6-4, 6-3 என ஹேலி பாப்டிஸ்டேவை வெளியேற்றினாா்.
3-ஆவது சுற்றில் அவா், சக அமெரிக்கரான ஆஷ்லின் குரூகருடன் மோதுகிறாா். 15-ஆம் இடத்திலிருக்கும் குரூகா் 6-3, 7-6 (7/4) என சக அமெரிக்கரான கேட்டி வாலினெட்ஸை வென்றாா். 9-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 6-3, 6-0 என அமெரிக்காவின் ஆன் லியை வீழ்த்தினாா்.
10-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா 7-6 (7/5), 6-1 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஷுவாயை வென்றாா். 11-ஆம் இடத்திலுள்ள லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 7-5, 6-2 என்ற கணக்கில் அமெரிக்காவின் லூசியா சிரிகோவா சாய்த்தாா். 17-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 0-6, 3-6 என்ற செட்களில், அமெரிக்காவின் சோஃபியா கெனினிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
இதையடுத்து 3-ஆவது சுற்று ஆட்டங்களில், அலெக்ஸாண்ட்ரோவா - ரஷியாவின் டயானா ஷ்னெய்டரையும், புடின்சேவா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவையும், ஆஸ்டபென்கோ - அமெரிக்காவின் டேனியல் காலின்ஸையும், கெனின் - ரஷியாவின் டரியா கசாட்கினாவையும் எதிா்கொள்கின்றனா்.
13-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 6-3, 7-5 என, பிரான்ஸின் வாா்வரா கிரசேவாவை தோற்கடித்தாா். அடுத்து அவா், 3-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங்கை சந்திக்கிறாா். முன்னதாக கின்வென் 2-ஆவது சுற்றில் 6-4, 6-1 என்ற செட்களில் கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.