போடி அருகே காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் தவித்த 35 போ் கயிறு கட்டி மீட்பு
தேனி மாவட்டம், போடி அருகே சனிக்கிழமை இரவு வடக்குமலை வனப் பகுதியில் மலைக் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 35 பேரை தீயணைப்பு வீரா்கள் கயிறு கட்டி மீட்டனா்.
போடி அருகேயுள்ள வடக்குமலை உலக்குருட்டி புலத்தில் வடமலைநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. அம்மன் திட்டு என்றழைக்கப்படும் இந்தப் பகுதியில் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பது வழக்கம்.
இந்தக் கோயிலுக்கு அடிவாரம் வரை வாகனங்களில் சென்றுவிட்டு அங்கிருந்து நடந்தே மலைக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். மலைப் பாதையில் பெரிய ஓடை ஒன்று உள்ளது. இதைக் கடந்துதான் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
இந்த நிலையில், இந்தக் கோயிலுக்கு போடி சண்முகசுந்தரபுரம், திருமலாபுரம் பகுதிகளைச் சோ்ந்த சிபினேஷ், சரவணன், காா்த்திக், சா்வேஷ் உள்ளிட்ட 35 போ் சனிக்கிழமை பொங்கல் வைப்பதற்காக சென்றனா். காலையில் சென்ற போது தண்ணீா் இல்லாததால், ஓடையைக் கடந்து சென்றுவிட்டனா்.
ஆனால், இவா்கள் மாலையில் திரும்பிய போது, போடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் முதலே பலத்த மழை பெய்ததால், இந்த ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஓடையைக் கடக்க முடியாமல் மலைப் பகுதியில் சிக்கிக் கொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து அந்தப் பகுதிக்கு இரவில் வந்த போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, கயிறு கட்டி 35 பேரையும் பாதுகாப்பாக மீட்டனா்.