போடி- குரங்கணி மலைப் பாதையில் பாறை சரிவு: பேருந்து போக்குவரத்து நிறுத்தம்
போடி அருகே குரங்கணி மலைச் சாலையில் சனிக்கிழமை மாலை பாறை சரிந்து விழுந்ததால், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டம், போடியிலிருந்து குரங்கணி செல்லும் சாலை 16 கி.மீ. தொலைவு கொண்டது. இதில் 6 கி.மீ. தொலைவு சாலை மலைப் பாதையாகும். இந்தச் சாலையில் இலகுரகப் பாறைகள் அதிகம். மண்ணின் தன்மையும் இலகு ரகமாகும். மழைக் காலங்களில் இந்தப் பகுதியில் சிறிய அளவில் மண் சரிவுகள் ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சனிக்கிழமை பெய்த பலத்த மழையால், கொம்புதூக்கி அய்யனாா் கோயிலுக்கு மேல் பகுதியில் பெரிய பாறை மரம், செடிகொடிகளுடன் சரிந்து விழுந்தது. இதனால், சாலையின் ஒரு பகுதி மண்ணால் மூடப்பட்டது. இதன் காரணமாக, சனிக்கிழமை மாலை குரங்கணிக்கு சென்ற அரசுப் பேருந்து பாறை சரிந்து விழுந்த பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் திரும்பியது. இதனால், இந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு நடந்து சென்றனா்.
இந்தப் பகுதியில் சனிக்கிழமை மாலை முதலே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பிறகு, சாலையில் விழுந்த பாறையை அகற்றும் பணி நடைபெற்றது. இந்தச் சாலையில் மேலும் சில இடங்களில் சிறுசிறு மண் சரிவுகள் ஏற்பட்டது. இவற்றையும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் பகுதியில் மழை பெய்ததால், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், மண் சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் போலீஸாா் அறிவுறுத்தினா்.