போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை நிமோனியா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்கு சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் உதவியாலேயே தற்போது அவர் சுவாசித்து வருவதாகவும், இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 24) மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் அவர் இருந்து வருவதால் உடல்நிலை அபாய கட்டத்தை எட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.