தில்லி பேரவை இடைக்காலத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி பதவியேற்பு!
ஹோலி கொண்டாடிய மாணவர்களுக்கு நோட்டீஸ்: சர்ச்சையில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்
கராச்சி: பாகிஸ்தானில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஹிந்து பண்டிகையான ஹோலியைக் கொண்டாடிய மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான தாவூத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் சிலர் அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஹிந்து பண்டிகையான ஹோலியைக் கொண்டாடினர். கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாவர்.
ஹோலி கொண்டாடியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரி அவர்களுக்கு இந்த பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸின் பிரதியை முன்னாள் எம்.பி.யான லால் மால்ஹி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் 'பாகிஸ்தானில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சடங்குகளை மேற்கொள்வது குற்றமாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதும் தற்போது குற்றமாகியுள்ளதா? ஒரு பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாடுவது தேசத் துரோக நடவடிக்கையாக கருதப்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து தாவூத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவல்களையும் பல்கலை. நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பல்கலை. நிர்வாகம் தெரிவிக்கையில் 'நிர்வாகத்தின் ஒப்புதலைப் பெறாமல் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாகவே மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்' என்று கூறியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தின்போது சில மாகாணங்களில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் இதேபோன்ற பிரச்னையை எதிர்கொண்டனர். எனினும், அந்தப் பிரச்னை பின்னர் ஓய்ந்துவிட்டது.
பாகிஸ்தானில் பல்கலைக்கழக வளாகங்களில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட யாரும் கலாசார கொண்டாட்டங்களை நடத்துவதை முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் எதிர்த்து வருவது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.