மதுரை ஆவினுக்கு பால் கொள்முதலில் முறைகேடு: விசாரணைக் குழுவை அமைக்க வலியுறுத்தல்
மதுரை ஆவினுக்கு மொத்த பால் குளிரூட்டும் மையங்களிலிருந்து பால் கொள்முதல் செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என பால் முகவா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக, மதுரை மாவட்ட பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கத்தினா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: மதுரை மாவட்டத்தில் சுமாா் 650 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சுமாா் 1.65 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 51 மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களில் குளிரூட்டப்படுகிறது. பின்னா், அங்கிருந்து மதுரை மத்திய பால் பண்ணைக்கு ஆவின் டேங்கா் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
பால் குளிரூட்டும் நிலையங்களிலிருந்து, மதுரை மத்திய பால் பண்ணைக்கு ஆவின் டேங்கா் லாரிகளில் பாலை ஏற்றும் போதே ‘டிப் ஸ்கேல்’ என்றழைக்கப்படும் அளவீட்டுக் கருவி மூலம் எவ்வளவு லிட்டா் பால் ஏற்றப்படுகிறது என்பதையும், பாலின் தரத்தையும் உறுதி செய்து உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
ஆனால், இந்த முறை பின்பற்றப்படாததால் ஆவினுக்கு அனுப்பப்படும் பாலின் அளவு, தரத்தைக் குறைத்துக் காண்பித்து மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக மதுரை மாவட்டம், வாழைத்தோப்பு மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை ஆவினுக்கு அனுப்பப்பட்ட மொத்த பாலின் (2,16,085 லிட்டா்) அளவில் சுமாா் 3,422லிட்டா் ஆவின் தரப்பிலிருந்து குறைத்து கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதனால் பால் உற்பத்தியாளா்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய சுமாா் ரூ.1.30 லட்சத்தை குளிரூட்டும் மையத்தின் தலைவா், தனது சொந்தப் பணத்திலிருந்து பட்டுவாடா செய்யும் நிலை ஏற்பட்டது.
இதுதொடா்பாக வாழைத்தோப்பு மொத்த பால் குளிரூட்டும் மையத் தலைவா் வைரமணி மதுரை ஆவின் பொதுமேலாளருக்கு அனுப்பிய புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கெனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள கோப்பம்பட்டி, சக்கரைப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, உத்தப்பநாயக்கனூா், உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூா், மேலதிருமாணிக்கம், டி.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளிலிருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆவினுக்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீா் கலப்படம் செய்த விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இது தொடா்பாக ஆவின் நிா்வாகத்துக்கு புகாா் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தமிழக முதல்வா் இதில் தலையிட்டு, மதுரை மாவட்டம் மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களிலிருந்து, ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்ட பாலின் அளவு, தரம் குறித்த கணக்குகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஆவின், பால்வளத் துறை அதிகாரிகள் இல்லாமல் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.