செய்திகள் :

மழைநீர் சேமிக்க... மாநகருக்குள் இடமிருக்கிறது!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம் கடற்கரையை ஒட்டியிருப்பதால் அடிக்கடி பெருமழையை எதிர்கொள்கிறது. ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்ப்பதால், மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பது, சில, பல ஆண்டுகளாக வாடிக்கையாக உள்ளது.

சென்னையைப்போலவே மக்கள் நெருக்கமும் பெருமழையைச் சந்திக்கும் சீனா, ஜப்பான் நாடுகளில் என்ன செய்கிறார்கள் என்று தமிழ்நாட்டை ஆளும் அரசு கவனிக்க வேண்டிய நேரம் இது.

முன்பெல்லாம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் சென்னைப் போலவே பெருவெள்ளத்தில் மிதந்து வந்தது. ஆனால், தற்போது அந்தப் பிரச்னை அங்கு இல்லை. நம் ஊர் போலவே இட நெருக்கடியால் இயற்கையாக இருந்த மழைநீர் கால்வாய்களை மறித்துக் கட்டடங்கள் கட்டினார்கள். இதனால்தான் மழைநீர் வடியவில்லை என்று கண்டுபிடித்தார்கள். அதன் பிறகு பூமிக்கடியில் செயற்கை கால்வாய் தோண்டி, மழைநீரை அதில் ஓடவிட்டு இறுதியில் பூமிக்கு அடியில் கட்டப்பட்ட பெரிய தொட்டிகளில் அந்த நீரைச் சேமிக்கிறார்கள். இந்த மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் பூமிக்கு அடியில் இருப்பதால், மேல் பகுதியில் விளையாட்டு மைதானம், பூங்காக்கள் அமைத்துள்ளார்கள்.

இதே போலத்தான் சீனாவிலும். ஆனால், இன்னும் வேறுவிதமாகச் செயல்படுத்தியுள்ளார்கள். மழை அதிகமாகப் பெய்யும் நகரங்களில் ஸ்பாஞ்ச் சிட்டி (Sponge City) என்ற திட்டத்தை 2,000-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறார்கள். மழைநீரைப் பூமிக்கடியில் சேகரிக்கிறார்கள். மேல் பகுதியில் பசுமையான பூங்காக்களை அமைத்துள்ளார்கள். தேவைப்படும்போது இந்த நீரை மறுசுழற்சி செய்து குடிநீராகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். புதிதாக உருவாக்கப்படும் நகரங்களில் இத்தகைய கட்டமைப்பை உருவாக்கிய பிறகே, கட்டடங்களை எழுப்புகிறார்கள்.

ஆக, இந்த இரண்டு நாடுகளின் மழைநீர் சேமிப்புத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு நம் ஊர் சூழலுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். ‘மாநகருக்குள் எங்கே இடமிருக்கிறது?’ என்று தட்டிக் கழிக்காமல்,

ஏற்கெனவே இருக்கும் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை இதற்குப் பயன்படுத்துவது குறித்து யோசிக்கலாம்.

சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பிரச்னைக்குப் பூமிக்கடியில் நீர்த்தேக்கம் அமைப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும். அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள், காரணங்களை அல்ல.

-ஆசிரியர்