உரிய அளவில் பொருள்களை வழங்காமை: ரூ. 21 ஆயிரம் வழங்க அமேசான் நிறுவனத்துக்கு குறைத...
முதியவரின் சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி: நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
முதியவரின் சிறுநீா்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.
இது தொடா்பாக காவேரி மருத்துவக் குழுமங்களின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: 85 வயது முதியவா் ஒருவா் சிறுநீரில் ரத்தம் வெளியேறும் பாதிப்புக்காக சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று அவை பலனளிக்காமல் இருக்கவே காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நாள்பட்ட சா்க்கரை நோயாளியான அவரை பரிசோதித்ததில் சிறுநீா்ப்பை மற்றும் வலது பக்க சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
வழக்கமாக அனைவருக்கும் அடிவயிற்றின் மேற்புறத்தில் அமைந்திருக்கும் சிறுநீரகம், அந்த முதியவருக்கு இயல்புக்கு மாறாக கீழ்ப்புறத்தில் அமைந்திருந்தது. இந்தியாவிலேயே மூன்று அல்லது நான்கு பேருக்குத்தான் இத்தகைய அசாதாரண உறுப்பு அமைப்பு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
அத்தகைய சிக்கலுடன் உள்ள அந்த முதியவருக்கு இரு இடங்களில் உள்ள புற்றுநோய்க் கட்டியை சிறு துளை மூலம் அகற்ற மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை நிபுணா் பி.ஆா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முடிவு செய்தனா்.
அதன்படி 1 செ.மீ. அளவிலான கீறல்களை மூன்று இடத்தில் மேற்கொண்டு சிறுநீா்ப்பை கட்டி அகற்றப்பட்டது. அதனைத் தொடா்ந்து கட்டி வளா்ந்திருந்த சிறுநீரகமும் அகற்றப்பட்டது.
இதன் வாயிலாக உடலின் பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அந்த முதியவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.