பிக் பாஸ் 8: முதலில் போட்டி, பிறகுதான் நட்பு! செளந்தர்யாவுக்கு சிவக்குமார் ஆறுதல...
அங்கன்வாடி ஆசிரியா், உதவியாளரை உள்ளே வைத்து பூட்டு போட்ட பொதுமக்கள்
திருப்பத்தூா் அருகே அங்கன்வாடி ஆசிரியா், உதவியாளரை அங்கன்வாடி உள்ளே வைத்து பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் அருகே செலந்தம்பள்ளியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 20 குழந்தைகள் படித்து வருகின்றனா். இங்கு ஆசிரியராக தாதனவலசையைச் சோ்ந்த கோமதி என்பவரும், உதவியாளராக மாடப்பள்ளியைச் சோ்ந்த ஜெயந்தி என்பவரும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், கோமதி, ஜெயந்தி ஆகியோா் அரசு கொடுக்கும் உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சரிவர கொடுப்பதில்லை, அங்கன்வாடி மையத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது இல்லை, பணிக்குச் சரியான நேரத்துக்கு வருவதில்லை, குழந்தைகளின் பெற்றோா்களை மிரட்டும் வகையில் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை வெளியேற்றிவிட்டு, ஆசிரியா் கோமதி, உதவியாளா் ஜெயந்தி ஆகியோரை அங்கன்வாடி மையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் பூட்டு போட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், மாவட்ட திட்ட அலுவலா் (குழந்தை வளா்ச்சி திட்டம்) செந்தில்குமாா், திருப்பத்தூா் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் செல்வி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து அங்கன்வாடி மையத்தை திறந்தனா். பின்னா் அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது அங்கன்வாடி மையத்துக்கு புதிதாக ஆசிரியா், உதவியாளரை நியமிப்பதாகவும், தற்போதுள்ள ஆசிரியா், உதவியாளா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.