மாநிலங்களவையில் முதல்முறையாக இடம்பெறும் தெலுங்கு தேசம்!
அமராவதி: ஆந்திரத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், மாநிலங்களவையில் முதல்முறையாக தெலுங்கு தேசம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு டிசம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த வெங்கடரமணா ராவ் மோபிதேவி, பீடா மஸ்தான் ராவ் யாதவ், ஆா்.கிருஷ்ணய்யா ஆகியோா், கட்சித் தலைமை மீதான அதிருப்தியால் கடந்த ஆகஸ்டில் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா்.
இவா்களில் மோபிதேவியின் பதவிக் காலம் 2026, ஜூன் மாதத்திலும், யாதவ் மற்றும் கிருஷ்ணய்யா ஆகியோரின் பதவிக் காலமும் 2028, ஜூன் வரை (நான்கு ஆண்டுகள்) இருந்த நிலையில் ராஜிநாமா செய்தனர், இருவரும் இரண்டு ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில் இருந்து மூன்று உறுப்பினர்களும் ராஜிநாமா செய்தது ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக இருந்தது.
இதையும் படிக்க |வயநாடு தேர்தல் வெற்றி: சான்றிதழைப் பெற்றார் பிரியங்கா காந்தி!
தற்போது ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான கட்சிக்கு எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், மூன்று மாநிலங்களவை இடங்களைக் கைப்பற்றுவதற்கு,
பேரவையில் 164 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகள் தயாராகி வருகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜன சேனா, பாஜக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றன. தெலுங்கு தேசம் 135 தொகுதியிலும்,ஜன சேனா 21 தொகுதியிலும், பாஜக 8 தொகுதியிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், ஆந்திரத்தில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு போதுமான பேரவை உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாததால், சுமார் 40 ஆண்டுகளில் முதல்முறையாக மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டின் தொடக்கத்தில் மாநிலங்களவைக்கான தேர்தலில் போதுமான பேரவை உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தலில் போட்டியிடுவதை தெலுங்கு தேசம் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.