ராமதாஸ் விவகாரம்: `அவர் மட்டும் முதல்வரை அப்படி பேசலாமா... அது சரியா?' - எம்.பி திருச்சி சிவா கேள்வி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. இதனால் நேற்று இரு அவைகளும் முடங்கியது. தொடர்ந்து இன்றும் இரு அவைகளிலும் அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை, உத்தரப்பிரதேச சம்பால் மாவட்ட வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எம்.பி திருச்சி சிவா, ``மணிப்பூரில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள், ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இன்னும் அந்தக் கலவரம் தொடரும் சூழலே இருக்கிறது. டபுள் இன்ஜின் அரசில் நாட்டின் ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து நிம்மதியற்று இருக்கும் சூழல் அரசின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. பிரதமர், உள்துறை அமைச்சர் வாய்மூடி மௌனமாகவே இருக்கிறார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசக் கூட அனுமதிக்கவில்லை. அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கவில்லை.
உத்தரப்பிரதேச சம்பால் மாவட்ட வன்முறை வளர்ந்துகொண்டே செல்கிறது. இது குறித்து அந்த மாநில எம்.பி-கள் விவாதத்தை எழுப்பினார்கள். வழக்கம்போல சபாநாயகர் இவற்றை விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனநாயக நாட்டில் யார் செய்வது சரி, தவறு என்பதை விவாதித்து, அதற்கு தகுந்தது போல முடிவுகளை எடுக்கத்தான் நாடாளுமன்றம். ஆனால் அதற்கான சூழல் நாடாளுமன்றத்தில் இல்லை. இந்த முறை வெறும் மசோதாக்கள் மட்டும்தான் தயார் நிலையில் இருக்கின்றன. நாட்டு மக்களுக்கு பதில் சொல்லாமல் அவையை ஒத்திவைத்துக் கொண்டே செல்கிறார்கள். பிரதமர் எங்களைக் குற்றம் சொல்கிறாரே தவிர அவரின் கடமைகளை செய்கிறாரா என்றால் இல்லை.
நாடாளுமன்றத்துக்கு வருகிறார். ஆனால் அவரின் அலுவலகத்தில் அமர்ந்து கொள்கிறார். அவைக்கு வருவதே இல்லை. எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதுமில்லை. இவர்கள் விவாதத்தில் நம்பிக்கையில்லாதவர்கள். ஒருமுறை பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `என் தகுதிக்கு நான் போய் இவரை சந்திப்பதா...' என முதல்வரை சந்திப்பது குறித்துப் பேசினார். ஒரு கட்சியின் தலைவர், மாநிலத்தின் முதல்வர், சிறையிலே அவதிப்பட்டவர், மக்களுக்காக நின்ற ஒருவர். அவரை இப்படி பேசியது சரியா... அவர் மட்டும் இப்படி பேசலாமா?
முதல்வர் பேசியது ஒரு கருத்து அவ்வளவு தான். அதற்கு இவ்வளவு ஆவேசப்படத் தேவையில்லை. அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவேறியது. அது தொடர்பாக மைய வளாகத்திலே குடியரசுத் தலைவர் உறுதிமொழி வாசித்தபோது ஆங்கிலம் - இந்தி என இரண்டு மொழிகளில் மாற்றி மாற்றி வாசித்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கேட்டிருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.