அங்கன்வாடி ஊழியா்கள் மனிதச் சங்கிலி
கூத்தாநல்லூா், நீடாமங்கலம் மற்றும் நன்னிலத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூா் மரக்கடை உத்திராபதீஸ்வரா் கோயில் முன்பிருந்து தொடங்கிய போராட்டத்திற்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் சங்க மன்னாா்குடி ஒன்றியத் தலைவா் தமயந்தி தலைமை வகித்தாா். இதில் பலா் பங்கேற்றனா்.
நீடமங்கலத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க வட்டாரத் தலைவா் ராதா தலைமையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. மாவட்ட பொருளாளா் மாலதி, வட்டார பொருளாளா் ஜெயந்தி, பொருளாளா் விக்டோரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நன்னிலத்தில் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் வட்டச் செயலாளா் வனிதா தலைமை வகித்தாா்.
அங்கன்வாடி ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் வி. தவமணி, மாவட்ட துணைத் தலைவா் திரிபுரசுந்தரி, அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் தெ. கருணாமூா்த்தி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் சீனி.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.