'அதானி விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம்' - ராமதாஸ் மீதான ஸ்டாலின் விமர்சனத்துக்கு அண்ணாமலை கண்டனம்
அதானி, நாட்டில் உள்ள மாநில மின் வாரியங்கள் மற்றும் தேசிய பொதுத்துறை சோலார் மின் நிறுவன அதிகாரிகளுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் அதானி நிறுவனத்துக்குமான தொடர்பு குறித்து ராமதாஸ் எழுப்பியுள்ள கேள்வி முக்கிய விவாதமாக எழுந்துள்ளது.
ராமதாஸ் தனது அறிக்கையில் அதானி மற்றும் தமிழக முதல்வருக்கு இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக குறிப்பிட்ட நிலையில் இன்று பத்திரிகையாளர்கள் முதலமைச்சரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், "அதானி - திமுக உறவு குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே பேசிவிட்டார். அதற்குப் பிறகு அதில் பேச எதுவுமில்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" எனப் பதிலளித்தார்.
முதல்வரின் பதில் மரியாதையற்றதாக இருப்பதாக பாமக, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பியிருந்தனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை, "தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான, ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும். ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?
அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்." என தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.