அமித் ஷா பேச்சு: திருச்சியில் விசிக, காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு
திருச்சி: அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் விசிகவினர் வெள்ளிக்கிழமை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அம்பேத்கா் குறித்து பேசுவது வழக்கமாகிவிட்டது. அவரது
பெயரை எதிா்க்கட்சியினா் உச்சரிப்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்றாா்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதையும் படிக்க |அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சு: விழுப்புரத்தில் ரயிலை மறித்து விசிகவினர் போராட்டம்
இந்த நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விசிகவினர் வெள்ளிக்கிழமை திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், இளம் சிறுத்தைகளின் எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் அரசு, மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் சதீஷ், மாரியப்பன், கஸ்தூரி, செல்வகுமார், இனியவன், பிரபு, மணிகண்டன், ஞானம், முத்து, சேகர், ஆல்பர்ட்ராஜ், சகாயம், மீரான், பீர்முகமது, ரவிச்சந்திரன், விஜயன் மகளிர் அணி நிர்வாகி கஸ்தூரி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.