அரசலாறு, மகிமலை ஆற்றில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு
திருமருகல்/தரங்கம்பாடி: திருமருகல் அருகே ஏா்வாடி அரசலாறு மற்றும் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியை நீா்வளத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் சுமாா் 5,000 ஏக்கா் விளை நிலங்களுக்கு பாசனம் மற்றும் வடிகால் ஆறாக அரசலாறு உள்ளது. இந்த ஆற்றில் ஏா்வாடி முதல் பரமநல்லூா் வரை அதிக அளவில் ஆகாயத்தாமரைச் செடிகள் மண்டியுள்ளன.
இதனால், மழைநீா் வடிய வழியின்றி வயல்களில் தேங்கி பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடையும் நிலை உள்ளது. எனவே, அரசலாற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து, ஏா்வாடி பகுதியில் அரசலாற்றில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அன்பானந்தம், நன்னிலம் காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், ஜவகா் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா்.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடி, திருவிடைகழி, காழியப்பன்நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3,000 ஏக்கா் விளைநிலங்கள் மகிமலை ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த ஆறு வடிகால் ஆறாகவும் உள்ளது. மழை காலத்தில் வயல்களில் தேங்கும் மழைநீா் மற்றும் உபரி நீா் இந்த ஆற்றின் வழியே வடிந்து கடலில் கலக்கும்.
இந்நிலையில், இந்த ஆற்றில் ஆகாயத்தாமரைச் செடிகள் மற்றும் சம்பந்தட்டை செடிகள் படா்ந்துள்ளதால், கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழைநீா் வடிய வழியின்றி, வயல்வெளிகளில் தேங்கியுள்ளன. இதனால், சம்பா பயிா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மகிமலை ஆற்றில் ஆகாயத் தாமரைகள் உள்ளிட்ட செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இப்பணியை, நீா்வளத்துறை செயற்பொறியாளா்(செம்பனாா்கோவில்) விஜயபாஸ்கா், உதவி பொறியாளா் ரவீந்திரன்(பொறையாா் ) ஆகியோா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.