சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு விவகாரம்... லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் கைது..!
அன்மோல் பிஷ்னோய்
இந்தியாவில் பஞ்சாப் உட்பட வட மாநிலங்களில் மிரட்டி பணம் பறித்தல், கூலிக்கொலை, கொலை மிரட்டல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க். இக்கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
துப்பாக்கிச்சூடு
ஆனால் அவனது சகோதரன் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்கா மற்றும் கனடாவில் பதுங்கி இருந்து கொண்டு மற்றொரு கூட்டாளியான கோல்டி பிரருடன் சேர்ந்து இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறான். இக்கூட்டத்தில் 700 பேர் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் பாபா சித்திக்கை இக்கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சல்மான் கான் வீட்டின் மீதும் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அன்மோல் பிஷ்னோயிக்கு தொடர்பு கொண்டு இருப்பது மும்பை போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரெட் கார்னர் நோட்டீஸ்
இதையடுத்து அவனை தேடி கண்டுபிடிக்க மும்பை போலீஸார் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெற்றனர். அதன் அடிப்படையில் அவனை கைது செய்ய மும்பை போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று மத்திய விசாரணை ஏஜென்சி சர்வதேச போலீஸார் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. அதோடு அன்மோல் குறித்த தகவல்களை கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்றும் மத்திய விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.
அமெரிக்காவில் கைது..
இதையடுத்து சமீபத்தில் அமெரிக்கா தங்களது நாட்டில் அன்மோல் பிஷ்னோய் இருப்பதை உறுதி செய்தது. எனவே அவனை தங்களது நாட்டிற்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்க போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவனை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கைது செய்துள்ளனர்.
அன்மோல் மீது கனடாவில் ஹர்தீப் சிங் கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே அமெரிக்கா முதலில் அன்மோலை கனடாவிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவது சிரமம் ஆகிவிடும். இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இப்போது உறவு சரியில்லாமல் இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாப் பாடகர் சீதுமூஸ்வாலாவை கொலை செய்த பிறகுதான் அக்கூட்டத்தின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. தற்போது நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்காக அவருக்கு பிஷ்னோய் கேங்க் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...