அலங்காநல்லூர் அப்டேட்: உதயநிதியுடன் கலந்துகொண்ட இன்பநிதி; மாடுபிடிக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவருடன் மகன் இன்பநிதியும் வந்திருந்து உற்சாகமாக கண்டு களித்தார்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 5786 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 1000 காளைகள் அவிழ்த்துப்பட வாய்ப்புள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி துணை முதலமைச்சர் உதயநிதி வர தாமதமானதால 8 மணிக்கு தொடங்கியது. சிறந்த காளை மற்றும் வீரர்களுக்கு பரிசாக டிராக்டர், கார், டூவீலர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்குபெறும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
போட்டியை மொபைலில் படம் பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, போட்டியில் சிறப்பாக விளையாடிய காளை உரிமையாளர்,மாடுபிடி வீரர்களுக்கு இன்பநிதி பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான்..!
இன்றைய போட்டியில் மாடுபிடி வீரராக கலந்துகொள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் என்பவர் வந்திருந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்ற நிலையில், விதிகளின் அடிப்படையில் அவர கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
அலங்காநல்லூர் போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று காளை உரிமையாளர்கள் நேற்று இரவு போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் பின்னர் சமாதானப்படுத்தப்பட்டார்கள்.
தற்போது அனல் பறக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.