அதானி வெளிநாட்டில் குடியேற ஆயத்தம்? சுப்பிரமணியன் சுவாமி சொன்ன விஷயம்
`ஆட்சி அதிகாரம்; முதல் புள்ளியை வைத்துள்ளோம்... பல புள்ளிகள் தேவை' - திருமாவளவன் சொல்வதென்ன?
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வந்திருந்தார். முன்னதாக பழனி முருகன் கோயிலுக்கு சென்று திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வணங்கினார். திருமாவளவனுக்கு பழனி போக ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்று பிரசாதங்களை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ``ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. அது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மக்கள் அளிக்கும் அங்கீகாரம். என்றைக்கு தமிழக மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள். ஆட்சி அதிகாரம் குறித்து ஆதவ் அர்ஜுனா அவருடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்" என்றார்.
முன்னதாக தனியார் மண்டப திறப்பு விழாவில் பேசியபோது, ``பழனி மலைக் கோயிலுக்கு தேர்தலில் அதிக சீட் வேண்டும் என்பதற்காகவோ, பணம் காசு வேண்டும் என்பதற்காகவோ வரவில்லை. என் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதனால் அதனை காண்பதற்காகவே வந்துள்ளேன். அரசியலில் அடியெடுத்து வைத்தபோது எழுப்பிய முழக்கம் எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது. அதை அவ்வளவு எளிதில் எட்டிப்பிடித்துவிட முடியாது. நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்தேன். நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று, அப்படியென்றால் நானே முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. எளிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதையே குறிக்கும். அந்த செய்தி முதல் பக்கத்தில் வந்தது.
அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம். இன்னும் கோலங்கள் போட பல புள்ளிகள் தேவைப்படுகிறது. ஒரு புள்ளி வைத்துக் கொண்டு கோலம் போட முடியாது. நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைக்க வேண்டும். அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சியில் வென்றுவிட முடியாது. நாம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருக்கிறோம்.
தமிழகத்தில் அரசியல் விதிகளை திருத்தக் கூடிய வலிமை பெற்றவர்களாக இருக்கிறோம்.தென்னிந்தியா முழுவதும் சிறுத்தை கொடி பறக்கிறது. மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதற்காக கட்சியின் கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம்.
ஒரு சட்டமன்றத்துக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமனம் செய்துள்ளோம். எந்த கட்சியிலும் இல்லாத வகையில் புதிய பதவியை கொடுத்து கட்சியை வளர்த்து வருகிறோம்" என்றார்.