KPY Bala: ``எவ்வளவு வன்மம்; என்னை சர்வதேச கைகூலின்னு சொல்றாங்க!" - KPY பாலா காட்...
ஆப்கனில் பிரிட்டன் தம்பதி விடுதலை! மாதங்கள் கழித்து மனம் மாறிய தலிபான்கள்!
ஆப்கானிஸ்தான் நாட்டில், சொல்லப்படாத குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் (வயது 80) மற்றும் பார்பீ ரெனால்ட்ஸ் (75) தம்பதி, கல்வி மற்றும் பயிற்சி அமைப்பை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியதும், உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தலிபான்களின் தலைமையிலான அரசு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எந்தக் குற்றவழக்கின் கீழ் என்பதே அறிவிக்கப்படாமல், ரெனால்ட்ஸ் தம்பதியை தலிபான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 7 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி மேற்குலக நாடுகளின் அரசுகள் வலியுறுத்தி வந்தன.
இத்துடன், ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையில் கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்தது. தொடர்ந்து, ரெனால்ட்ஸ் தம்பதியின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் வலியுறுத்தலின் பேரில் பீட்டர் மற்றும் அவரது மனைவி பார்பீ ஆகியோரை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது.
அவர்கள் இருவரும், இன்று (செப்.19) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் தங்களது தாயகத்துக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் அப்துல் கஹார் பால்கி கூறுகையில், அந்தத் தம்பதி ஆப்கன் சட்டத்தை மீறினார்கள் என்றும், தற்போது அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலைச் செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர்கள் எந்தச் சட்டத்தை மீறினார்கள் என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, சர்வதேச நாடுகள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்க தலிபான்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், நீண்டகாலமாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ள ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்வதேச நாடுகளின் உதவிகள் தேவைப்படுவதால், பிரிட்டன் தம்பதியை அவர்கள் விடுதலைச் செய்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிக்க:உலகம் கவனிக்கிறது: பாகிஸ்தான் - பயங்கரவாதிகள் உறவு குறித்து இந்தியா!