ஆரணி பட்டு தயாரிப்பு மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது: திமுக எம்பி வலியுறுத்தல்
நமது நிருபா்
புது தில்லி: ஆரணியில் தயாராகும் பட்டின் மூலப் பொருள்களுக்கும், அரிசிக்கும் ஜிஎஸ்டிவரியை விதிக்கக் கூடாது என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தரணிவேந்தன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்விநேரம் முடிந்ததும் தொடங்கிய நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: ‘பட்டு நகரம்’ என அழைக்கப்படும் ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிகத் தொழில் நகரமாகும். ஆரணி பட்டு நெசவு நூற்பாலை மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு தாயகமாகும். இந்த நகரம் அரிசி உற்பத்தி மற்றும் பட்டு நெசவு மூலம் முக்கிய வருவாய் ஈட்டி வருகிறது. பட்டு நெசவுக்காக பட்டு நெசவு ஆலைகளும், சமூகங்களும் இந்த நகரத்தில் உள்ளனா்.
கைத்தறிவு நெசவு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சமீப காலமாக விசைத்தறிகள் போன்ற இயந்திரமுறைக்கு மாறியுள்ளன. திருவண்ணாமலை நகரத்தில் அதிக வருவாய் ஈட்டி வரும் இந்த நகரத்தில் தற்போது நெசவு த் தொழில் மெதுவாக மறைந்து வருகிறது. இங்கு பாரம்பரியமிக்க பட்டுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டாலும் மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
அதேபோன்று, சில்லறையில் விற்கப்படும் அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால், பட்டுப்பொருள் மூலப் பொருள்களுக்கும், சில்லறையில் விற்கப்படும்
25 கிலோ ஆரணி அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.