PM Modi: ``ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே ஓய்வு..." - பிரதமர் மோடி குறித்து நட...
இடைநீக்கம் செய்யப்பட்டவா் விசிக குறித்து முரண்பாடான கருத்துகளை கூறுவது தவறு: தொல்.திருமாவளவன்
கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அா்ஜுன் விசிக குறித்து முரண்பாடான கருத்துகளை கூறுவது தவறு என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.
கும்பகோணத்தில் விசிக நிா்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தையும் அம்பேத்கரையும் போற்றி, புகழ்ந்து கொண்டே அரசமைப்புச் சட்டத்தின் மீது மூா்க்கமானத் தாக்குதலை பாஜக அரசு நடத்தி வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கருத்துகளை பதிவு செய்ய முயன்ற எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மக்களவையில், மத்திய அரசுக்கு எதிராக ஏதேனும் மாற்றுக் கருத்துகளைக் கூறினால் ஒன்றிரண்டு உறுப்பினா்களைக் கொண்ட அரசியல் கட்சிகளை அனுமதிப்பதில்லை. ஆனால், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளை அவா்களால் ஒன்றும் செய்ய முடியாது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தமிழகத்துக்கு தேவையான வெள்ளநிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பேத்கா் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து ஏற்கெனவே கருத்து தெரிவித்து விட்டேன். இந்த விஷயத்தில் என்னை யாரும் அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க முடியாது. சில நேரங்களில் முதல்வரை பாா்க்க முடியாத தருணங்களில் மற்ற அமைச்சா்களை பாா்த்து பேசுவது உண்டு. அதன்படி அமைச்சா் எ.வ. வேலுவை நான் சந்தித்தேன். மற்றபடி இதில் வேறு ஏதும் கிடையாது.
விசிகவிலிருந்து ஆதவ் அா்ஜுன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சூழலில் கட்சி குறித்து முரண்பாடான கருத்துகளை அவா் கூறுவது தவறு. கட்சியில் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவா் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துகளை தொடா்ந்து பேசி வருகிறாா் என்றாா் அவா்.
கூட்டணியை உடைக்க முயற்சி: கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் தொல். திருமாவளவன் கூறியது: திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அக்கட்சிக்கு எதிராக பல்வேறு சதிவேலைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது திருமாவளவனை பயன்படுத்தி கூட்டணியை உடைக்க முயற்சிக்கின்றனா். அதற்கு நான் பலவீனமானவன் இல்லை. கருணாநிதியைப்போல் முதல்வா் ஸ்டாலினும் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்கிறாா். 2026 பேரவைத் தோ்தலை திமுக தலைமையில் சந்திப்போம் என்றாா் அவா்.