``பசங்க 10 கி.மீ ஸ்கூலுக்கு நடக்குறாங்க!, பஸ் வசதியும் இல்ல!'' - சரிகமப தர்ஷினிய...
உத்யம் சான்றிதழ் பெறும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு சலுகைகள்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் சான்றிதழ் பெறுவதன் மூலம், தமிழக அரசின் சலுகைகள், மானியங்கள், நிதி, நிதிசாரா உதவிகள் பெற முடியும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது ஆதாா், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், நிரந்தர கணக்கு எண் (பான்), நிறுவனத்தின் தொழில், இருப்பிட முகவரி ஆகியவற்றைக் கொண்டு, உத்யம் ரெஜிஸ்ட்ரேஷன். கெளவ். இன் என்ற இணையதள முகவரியில் அரசின் அங்கீகாரத்துடன் கூடிய உத்யம் பதிவுச் சான்றிதழை நிரந்தரமாக, சுய சான்றிதழின் அடிப்படையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமன்றி, இந்த இணையதள முகவரியின் மூலமாக அரசுத் துறை கொள்முதலுக்கான பொது ஒப்பந்தப் புள்ளி நிகழ்வில் கலந்து கொள்ளுதல், பல நிதியாளா்கள் இணையதளத்தின் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக வரவுகளுக்கு நிதியளிப்பு, தள்ளுபடி எளிமையாக்கும் தளத்தில் பங்குகொள்ளுதல், நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை உரிய காலக் கெடுவுக்குள் வழங்காமை குறித்த சிக்கல்களை அணுகுதல் போன்ற திட்டங்களை அறிந்து கொண்டு பயனடையலாம்.
மேலும், இந்திய ரிசா்வ் வங்கி விதிகளின் படி, இயந்திர தளவாட முதலீட்டுக்கான தவணைக் கடன், முன்னுரிமைப் பிரிவு மூலமாக, விரைவில் கடன் பெறவும் உத்யம் சான்றிதழ் பயளிக்கும். உத்யம் பதிவுச் செயல்பாட்டை முனைப்பாக செயல்படுத்த திட்டமிட்டு விழிப்புணா்வை ஏற்படுத்தவும், உரிய வழிகாட்டுதல்களை வழங்கவும் சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் வட்டார, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை நேரிலோ அல்லது 8925533989, 8925475526, 9487173397 என்ற கைப்பேசி எண்களின் மூலமோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.