இந்திய கடலோரக் காவல் படையில் குரூப் 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
``My Dear RCB... இப்படி ஒரு பந்தம் உருவாகும் என்று நினைக்கவில்லை!'' - முகமது சிராஜின் எமோஷனல் பதிவு
கடந்த ஏழு ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்த முகமது சிராஜ் தற்போது குஜராத் அணியில் விளையாட இருக்கிறார்.
நடைபெற்று முடிந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக பெங்களூரு அணியால் தக்கவைக்கப்படாத அவர் ஏலத்தின் போது நிச்சயம் ஆர்சிபி அணியால் வாங்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதுவரை ஆர்சிபி அணிக்காக 87 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் ஆர்சிபி அணி குறித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், " `மை டியர் ஆர்.சி.பி', ஆர்.சி.பி அணியின் ஜெர்சியை அணிந்திருந்த நாள்களை நான் மறக்கவே மாட்டேன். ஆர்.சி.பி அணியுடன் நான் இணைந்த போது இப்படி ஒரு பந்தம் உருவாகும் என்று நினைக்கவில்லை. பெங்களூரு அணிக்காக முதல் பந்து வீசியது, முதல் விக்கெட் எடுத்தது என ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. முதல்முறையாக ஆர்சிபி ஜெர்சியை அணியும் போது, இப்படியொரு பந்தம் உருவாகும் என்று நினைக்கவில்லை.
ஆர்சிபி என்பது ஒரு அணி மட்டுமல்ல அது ஒரு உணர்வு. அங்கு இருப்பது வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் உணர்வை கொடுக்கும். சில நேரங்களில் தோல்வியை எதிர்கொள்ளும் போது வெளியில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு சோகத்தை கொடுக்கும். அப்போது மைதானத்தில் இருந்து வரும் உங்களின் குரல்கள், சோசியல் மீடியாவில் வரும் மெசேஜ்கள், உங்களின் ஆதரவு தான் அடுத்த இலக்கை நோக்கி ஓட வைக்கும். உங்களின் கனவின் கணத்தையும், நம்பிக்கையையும் உணர்ந்திருக்கிறேன். அதற்காக முழுமனதுடன் செயல்பட்டுள்ளேன்.
நாங்கள் வீழ்ந்த போது உங்களின் கண்ணீரையும் கண்டிருக்கிறேன். நாங்கள் எழுந்த போது உங்களின் கொண்டாட்டத்தையும் பார்த்திருக்கிறேன். ஆர்சிபி ரசிகர்களை போல் உலகில் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள். இது நிச்சயம் நான் அந்த அணியில் இருந்து பிரிவதற்கான நேரம் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் இந்த அணியில் இருந்து வெளியேறுவதால் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அனைவருக்கும் நன்றி" என்று மிகவும் எமோஷனலாகப் பதிவிட்டிருக்கிறார். ஆர்.சி.பி ரசிகர்கள் இந்தப் பதிவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...