ஆர்டிஎஸ்ஓ ஒப்புதல் இல்லாமல் பாம்பன் பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி எ...
BB Tamil 8 Day 52: `என்னால முடியல'- லவ் அட்ராசிட்டியால் தவிக்கும் பவித்ரா; சவுந்தர்யாவா? ஜெனிலியாவா?
தீபக் இரவு தூங்கி விட்டாலும் அவருடைய மனதிற்குள் தன்னுடைய பொம்மையின் நிலை என்னவாயிற்று? என்கிற கேள்வி உறைந்திருக்க வேண்டும். எனவே வேக்அப் பாடலுக்கு முன்பே எழுந்து வெளியே வந்து குப்பைத் தொட்டியை எட்டிப் பார்த்தார். ‘பொம்மாயி.. பொம்மாயி’ என்கிற பாடலை ஒலிப்பரப்பினார்கள். பொம்மை டாஸ்க்குடன் மேட்ச் பண்ணுகிறார்களாம்.
தீபக்கின் பொம்மையைக் காப்பாற்ற அன்ஷிதா எடுத்த முயற்சியை பலரும் பாராட்டினார்கள். ‘எல்லோரும் பொம்மையை ஹோல்ட் பண்ணா.. நீ ‘சுசு’வை ஹோல்ட் பண்ணியிருக்க” என்று நையாண்டியாக பாராட்டிய முத்து “நீ சரியா விளையாடாத போது நாமினேட் பண்ண முதல் ஆள் நான்தான். அதைப் போல நேத்து நல்லா ஆடினதுக்கு பாராட்டற முதல் ஆளும் நான்தான். நேத்தே சொன்னேனே.. நீ உன் கேமை ஆரம்பிச்சிட்டேன்னு” என்று அன்ஷிதாவிற்கு சான்றிதழ் தந்தார் முத்து. ஆனால் அன்ஷிதா தீபக்கிற்காக போராடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். அவருக்கு ஜாக் மற்றும் மஞ்சரி மீது கோபம். ஜாக்குலின் அருகில் வந்த போது ‘இப்ப பேச இஷ்டம் இல்லா’ என்று அவரை திருப்பி அனுப்பி வைத்தார் அன்ஷூ.
‘எப்படி இருந்த அவன்… இப்ப இப்படி ஆயிட்டான்’
மார்னிங் ஆக்டிவிட்டி. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ காமெடி மாதிரி ‘வரும் போது இப்படி இருந்தவன், இப்ப இப்படி ஆயிட்டான்’ என்று மற்றவர்கள் பற்றி ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். “போர் வீரர் மாதிரி வந்த ஆளு, இப்ப கமாண்டர் ஆயிட்டார்” என்று அருணை ‘அமரன்’ ஆக்கி அழகு பார்த்தார் சத்யா. “பொறி கடலை சாப்பிட வந்தவங்க மாதிரி இருந்த அன்ஷிதா, இப்ப போட்டில உக்கிரமா இறங்கிட்டாங்க” என்று சமீபத்திய நிலவரத்தை வைத்து பாராட்டினார் முத்து.
“உடைக்கவே முடியாத பலூன் மாதிரி தெரிஞ்ச ராணவ், இப்ப காத்து போன பலூனா மாறிட்டாரு” என்று பங்கம் செய்தார் ஜெப்ரி. “அடம் பிடிச்ச சாச்சனா, இப்ப மத்தவங்க பேச்சை ஏத்துக்க ஆரம்பிச்சிருக்கா” என்கிற நம்ப முடியாத அதிர்ச்சியான தகவலைச் சொன்னார் தர்ஷிகா. ‘ஃபைட்டர்’ என்று ஜாக்குலினுக்கு புகழாரம் சூட்டினார் அருண். “தூய ஆன்மா என்று கருதப்பட்ட அன்ஷிதாவின் இன்னொரு முகத்தில் வெளிப்பட்ட வன்மத்தைப் பார்த்தேன்” என்று நேரடிக் குத்தாக இறக்கினார் மஞ்சரி. அதுவரை ‘கம்முனு’ இருந்த இருந்த அருண், வைல்ட் கார்ட் என்ட்ரிக்குப் பிறகு ‘ஜம்முன்னு’ மாறிட்டாராம். இதைப் பலரும் சொன்னார்கள்.
மாற்றான் சூர்யா மாதிரி ரயானிடமே ஒட்டித் திரியும் சவுந்தர்யா, ஒரு மாறுதலுக்கு சிவக்குமாரிடம் தன் மனக்குறையைச் சொல்லி தோளில் சாய்ந்து கண்ணீர் விட ‘அதுக்குத்தான் நான் இருக்கேனே?” என்று எட்டிப் பார்த்தார் ஜெப்ரி. ரயானுக்கும் இதனால் வருத்தம் போலிருக்கிறது. “பொம்மை டாஸ்க்கில் நான் என்னை சேவ் பண்ண யோசிக்கவேயில்லை. மற்றவர்களுக்காகவே தியாகம் செய்கிறேன்” என்பது சவுந்தர்யாவின் வருத்தம். தங்களிடம் அனத்தாமல் சிவக்குமாரிடம் போனதால் ரயானும் ஜெப்ரியும் சவுண்டடிடம் ‘டூ’ விட்டு பேசாமல் இருந்தார்கள். ‘ஏண்டா.. இப்படிப் பண்றீங்க?” என்று அவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் சவுண்டு.
மழையில் போராட்டம் நடத்திய சவுந்தர்யா - அடுத்த ஜெனிலியாவா?
திடீரென்று சூப்பர்வைசர் அவதாரம் எடுத்த சவுந்தர்யா, ‘பாயாசம் யார் குடிச்சாங்க.. இந்த கிளாஸ் யாருது?’ என்று வீடெங்கும் விசாரித்து அதற்கு சத்தியமெல்லாம் வாங்கியும் விடை கிடைக்காததால் வெறுப்புற்று ‘நான் மழையில் நனையப் போகிறேன். அப்பவாவது உண்மை வருதான்னு பார்க்கலாம்’ என்று கார்டன் ஏரியாவின் நடுவே போய் மழையில் அமர்ந்தார். ‘போராளி’ என்கிற பட்டம் முன்பே கிடைத்து விட்டதால் அதைத் தொடர்கிறார் போலிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இன்னொரு ‘ஜெனிலியா’ கிடைத்து விட்டார் என்பதை சவுந்தர்யா தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
தர்ஷிகா ரொமான்ஸ் மோடில் இருப்பதால், ‘அவளிடம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே இப்போதெல்லாம் பெரிய விஷயமாகி விட்டது. பக்கத்திலேயே விஷால் இருக்கான். எரிச்சலா வருது” என்று பவித்ரா புலம்ப, அதையே இன்டலெக்சுவலாக எதிரொலித்துக் கொண்டிருந்தார் ஆனந்தி. “ஏண்டி.. இவளே. மிளகாய் அரைச்சு தர்ஷூவுக்கு கை எரியுதாம். அதுக்கு மருந்து போட விஷால்தான் வரணுமா.. ஏன் இன்னொரு கைல தானே போட்டுக்கிட்டா ஆகாதா?” என்கிற வசனத்தை இன்றைக்கு இரண்டு முறை சொல்லி புலம்பினார் பவித்ரா.
வெளியே மழை பெய்ததால் பொம்மை டாஸ்க்கை தொடர முடியாத நிலைமை. எனவே எப்படியாவது பொழுதைப் போக்க வேண்டுமே என்று திடீர் உப்புமா மாதிரி திடீர் டாஸ்க்கை யோசித்து அறிவித்தார் பிக் பாஸ். ஒவ்வொருவருக்கும் இரண்டு வாக்கியங்கள் தரப்படும். அதற்குப் பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும்.
‘இவன் நூறு காமிராலயும் தெரிவான்’ என்கிற வாக்கியத்திற்கு சவுந்தர்யாவைத் தேர்ந்தெடுத்தார் தீபக். பிக் பாஸ் வீட்டின் அத்தனை காமிராக்களும் சவுண்டிற்குத்தான் லைக் பட்டனை அழுத்துகிறதாம். ‘எந்தக் காமிராலயும் தெரிய மாட்டான்’ என்று ரஞ்சித்தைப் பற்றி தீபக் சொன்னது உண்மை. ‘சாமி.. தங்கம்..’ என்றே ரஞ்சித் பேசுவதால் அவருக்கு ‘சாமி’ என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ‘நான் சாமியைச் சொல்றேன்” என்றார் தீபக். (சாமி என்றாலே யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்தானே?!)
‘ராணவ் சுத்த வேஸ்ட்டு’ - பங்கம் செய்த சவுந்தர்யா
‘இவங்க கிட்ட சொப்பு சாமான் கொடுத்தா… ஓரமா உக்காந்து சமர்த்தா விளையாடுவாங்க’ என்கிற வாக்கியத்திற்கு விஷாலையும் தர்ஷிகாவையும் தேர்ந்தெடுத்து சிவக்குமார் சொல்ல, ஒட்டு மொத்த வீடும் வெடித்து சிரித்தது. சம்பந்தப்பட்டவர்களும் வெட்கத்துடன் இதில் கலந்து கொண்டார்கள். ‘அதுக்கு கூட சரிப்பட்டு வரமாட்டான்’ என்கிற வாக்கியத்திற்கு ரஞ்சித்தின் பெயரை சிவக்குமார் சொல்ல “காரணம் சொல்லுங்க.. நீங்கதான் தைரியமான ஆளாச்சே?” என்று ஜாலியாக கமெண்ட் அடித்து உசுப்பேற்றினார் பிக் பாஸ்.
‘இவளை நம்பி எதையுமே சொல்ல முடியாது. எதிர் டீம்ல போய் சொல்லிடுவா” என்று சாச்சனாவை கைகாட்டிய சவுந்தர்யா ‘சொன்னாலும் வேஸ்ட்டு’ என்கிற கேட்டகிரிக்கு ராணவ்வை சுட்டிக் காட்டி “எத்தனை விளக்கினாலும் கடைசி வரைக்கும் இவனுக்குப் புரியவே புரியாது. சுத்த வேஸ்ட்டு” என்கிற மாதிரி கலாய்த்தார். (அம்மணி பிக் பாஸ் படிப்பில் பிஎச்டி வாங்கினவங்க!).
‘நீ யோக்கியன்தான். ஒத்துக்கறேன். ஆனா கேம் ஆடணும்’ என்கிற வாக்கியத்திற்கு பலத்த சிரிப்பிற்கு மத்தியில் ரயானைத் தேர்ந்தெடுத்தார் விஷால். ஆனால் இது ரஞ்சித்திற்குத்தான் கூடுதலாகப் பொருந்தும். ‘விளையாட்டுன்ற பேர்ல… நீ ஒண்ணு பண்ற பாரு’ என்கிற வாக்கியத்திற்கு சவுந்தர்யா தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலும் பொருத்தமானது.
“பாயசத்தையே பாய்சன் மாதிரி கொடுப்பா” என்று ஜாக்குலினைச் சொன்ன ராணவ் “ஸ்ட்ரையிட்டா பாய்சனே கொடுப்பா” என்று சவுந்தர்யாவைச் சொன்னார். “ஏதோ சொல்லணும்னு சொல்றான்” என்று முகத்தை ஒடித்துக்கொண்டார் சவுந்தர்யா. ‘நீ கிட்ட வா’ என்பதற்கு ஆனந்தியையும் ‘நீ எட்ட போ’ என்பதற்கு ஜாக்குலினையும் தேர்ந்தெடுத்தார் அன்ஷிதா. ஜாக்குலின் மீது கடுமையான காண்டில் இருக்கிறார் போலிருக்கிறது.
‘இவனுக்குள் ஒரு குழந்தை’ என்று ரஞ்சித்தைப் பெருமைப்படுத்திய ஜெப்ரி “இதெல்லாம் ஒரு குழந்தையா?’ என்று சாச்சனாவைச் சொல்லி பங்கப்படுத்தினார். ‘இதை நான் எதிர்பார்த்தேன்’ என்கிற மாதிரி சிரித்தார் சாச்சனா. “இவனுக்கெல்லாம் ஏன் இவ்வளவு கிளாப்ஸ் வருது?” என்பதற்கு முத்துவைக் கைாட்டி வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தினார் அருண். “இவனுக்கு ஏன் கைத்தட்டலே வரமாட்டேங்குது?” என்பதற்கு தீபக்கைத் தேர்ந்தெடுத்தார்.
‘அருணும் சவுந்தர்யாவும் ஒண்ணு.. அறியாதவங்க வாயில மண்ணு’
“அருணுக்கு ஏன் இத்தனை வன்மம்?” என்று பிறகு புலம்பிக் கொண்டிருந்தார் முத்து. ஜாக்குலினை ‘ஜூனியர் வனிதாக்கா’ என்று தூரத்தில் இருந்து கிண்டலடித்த விஷால், அவர் சவுண்டிற்கு பாடிகார்டு போல் செயல்படுகிறார் என்றும் விமர்சித்தார்.
‘அருணும் சவுந்தர்யாவும் ஒண்ணு.. அறியாதவங்க வாயில மண்ணு’ என்கிற தலைப்பில் தீஸிஸ் பேப்பர் சப்மிட் செய்வது மாதிரி ஆய்வு செய்து படம் வரைந்து பாகங்களைக் குறித்து தீபக்கிடம் விளக்கிக் கொண்டிருந்தார் முத்து. இருவருமே ஆரம்பத்தில் ‘ஆட்டோ மாணிக்கம்’ மாதிரி சாதாரணமாக இருந்தார்களாம். பிறகுதான் ‘மாணிக் பாட்ஷா’ மாதிரி பட்டாசாக மாறினார்களாம். முத்து இதை விளக்கிக் கொண்டிருந்த போது எப்படியெல்லாம் அவர் இந்த ஆட்டத்தை அப்சர்வ் செய்து கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது.
மழை நின்றதால் பொம்மை டாஸ்க்கை மீண்டும் ஆரம்பித்தார் பிக் பாஸ். சவுந்தர்யா, ராணவ், தீபக் ஆகியோர் ஏற்கெனவே அவுட் ஆகியிருப்பதால் அவர்களால் ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. சில புதிய விதிகளைச் சேர்த்து ஆட்டத்தை ரணகளமாக்கினார் பிக் பாஸ். ‘பந்துகளால் அமைந்த நீச்சல்குளம் இருக்காது. வெளியேவும் பொம்மையை மாற்றிக் கொள்ளலாம். மற்றவர்கள் வைக்காதவாறு தடுக்கவும் செய்யலாம்’ என்று விவரித்து விட்டு “நேத்திக்கு நடந்தது டெஸ்ட் மேட்ச்சுன்னா.. இன்னிக்கு நடக்கப் போறது 20 - 20” என்று சுருக்கமாக அவர் வர்ணித்த பன்ச் டயலாக் நன்று.
தள்ளுமுள்ளு, அடிதடி - ரணகளமாக நடந்த பொம்மை டாஸ்க்
பிக் பாஸ் திருத்தியமைத்த விதிகள் காரணமாக ஆட்டத்தில் கொடூரமான தள்ளுமுள்ளு நடந்தது. முதல் சுற்றிலேயே விஷாலுக்கும் ஜாக்கிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதில் தர்ஷிகா அவுட் என்பதால் கூடுதல் உக்கிரத்துடன் இருந்தார் விஷால். ‘நீ என்னை கடிச்சே’ என்று சாச்சனாவை நோக்கி பவித்ரா கத்த, அன்ஷிதாவும் ‘டிரஸ்ஸை எல்லாம் தூக்கிப் பார்க்காதே’ என்று எரிச்சல்பட்டார். “அப்ப யாரும் டிரஸ்ஸூக்குள்ள பொம்மையை ஒளிச்சு வைக்காதீங்க” என்று பதிலுக்கு கத்தினார் சாச்சனா. விஷாலின் மேல் நாலைந்து பேர் படுத்து அவரை நசுக்கி விட்டார்கள்.
அடுத்த சுற்றில் அன்ஷிதா அவுட். ஆனால் யார் எந்தப் பொம்மையை வைத்தார்கள் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ‘பவித்ராவின் பொம்மையை நான் வைத்தேன்’ என்று ரஞ்சித் சொல்ல, அதையே அன்ஷிதாவும் சொன்னார். எப்படி ஒரே பொம்மையை இருவர் வைக்க முடியும்? ஒருவேளை ரஞ்சித் தவறுதலாக தன்னுடைய பொம்மையை தானே வைத்து விட்டாரா? இப்படியொரு குழப்பம் வந்தவுடன் ரஞ்சித்தும் குழம்பி காற்றில் படம் வரைந்து யோசித்துக் கொண்டிருந்தார்.
“நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை மிஸ்டர். ரஞ்சித்” என்று பிக் பாஸ் பில்டப் தந்தவுடன் ரஞ்சித்தான் தவறு செய்தார் என்று எல்லோருக்கும் தோன்றியது. அவர் செய்த சேஷ்டைகள் அப்படி. ஆனால் பிக் பாஸ் சும்மா லுலுவாய்க்கு விளையாடினாராம். அன்ஷிதாதான் ரஞ்சித் பொம்மையை வைத்திருக்கிறார். அவசரத்தில் பெயரைக் கூட சரியாகப் பார்க்கவில்லை போல.
அடுத்த ரவுண்டில் முத்து அவுட். மஞ்சரி தலையில் அடி. அதற்கு அடுத்த ரவுண்டில் ‘ரெடி.. ஸ்டெடி. செட்’ என்றெல்லாம் பில்டப் தந்த பிக் பாஸ், பிறகு ‘அன்றாட வேலைகளைப் பாருங்க’ என்று ஜாலியாக கலாய்த்து அனுப்பினார். மழை காரணமாக ஆட்டம் ரத்து.
“தலை இங்கே இருக்கிறது.. எனில் உடல் எங்கே?” என்று அன்ஷிதா அவுட் ஆன முறையில் சந்கேத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தார் முத்து. அருண்தான் எதையாவது கோக்குமாக்காக செய்திருப்பாரோ என்று அவருக்குச் சந்தேகம். பிறகு அருணிடமே இதை நேரடியாகக் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டார்.
“என்னை வெளியே அனுப்ப பிளான் பண்றாங்க” - ஜாக்குலின்
“முத்துவிற்கு ரசிகர்கள் அதிகம். சவுந்தர்யாவிற்கு ஃபேன்ஸ் ஜாஸ்தி.. இவங்களோட என்னையும் சேர்த்து வெளியே அனுப்ப பிளான் பண்றாங்க” என்று எதிர் டீம் குறித்து ரயானிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஜாக்குலின். குழம்பு பிரச்சினையை அருண் மீண்டும் ஆரம்பித்தார். அவர் உணவு பரிமாறும் போது “உங்களோட ரேஷனை எடுத்துக்குங்க.. சாப்பிடறீங்களோ.. இல்லை… யாருக்காவது ஷேர் பண்றீங்களோ.. அது உங்க பிரச்சினை.” என்று ஆனந்தியிடம் அருண் சொல்ல “சாமி.. ஒருத்தர் போதும்ன்ற போது விட்டுடலாம்ல” என்று ரஞ்சித்தும் சொல்லிப் பார்க்க “கிச்சன் இன்சார்ஜ்.. நான்தான். விட்டுடுங்க.. இதுனால பிரச்சினை வருது” என்று அவரையும் அடக்கினார் அருண்.
“என்ன சொன்னாலும் அடங்கறானா பார்த்தியா?” என்பது மாதிரி நமட்டுச்சிரிப்புடன் மஞ்சரியைப் பார்த்தார் முத்து. “அக்கா.. அதை என் கிட்ட கொடுங்க” என்று ஆனந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார், உணவுப் பிரியையான சாச்சனா.
“இங்க… ஹாஸ்டல்ல இருக்கற மாதிரி இருக்கு. இப்படி வை.. அப்படிப் போ -ன்னு ஒரே ஆர்டரா இருக்கு. கிச்சன் பக்கம் போய் எதையும் எடுக்க முடியலை. சந்தேகமா பார்க்கறாங்க” என்கிற புகாரை பவித்ரா காலையிலேயே சொல்லிக் கொண்டிருந்தார். தீபக்கின் கேப்டன்சி அத்தனை கடுமையானதாக இருக்கிறதாம். இது பற்றி தீபக்கிடமே அவர் விசாரிக்க “இங்க பாருங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரோல் இருக்கு. நான்தான் சொல்லியிருக்கேன். அதெல்லாம் அவங்க அவங்க பொறுப்பு” என்று நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு பொறுமையாக விளக்கினார் தீபக். இதுவே கேப்டனாக இல்லாமலிருந்தால் விஜயகாந்த் மாதிரி கண்கள் சிவக்க கைகளை உயர்த்தி முறுக்கியிருப்பார்.
ரேஷன் முறையில் கிச்சன் இயங்கும் போது அதற்குரிய பொறுப்பாளரைக் கேட்டு எடுப்பதுதான் முறையானது. சொந்த வீட்டில் இருப்பது போன்ற வசதியை பவித்ரா எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.
விஷால் - தர்ஷிகா ரொமான்ஸ் - எம்.ஜி.ஆர் படக்காட்சி ரிப்பீட்டா?
எம்.ஜி.ஆர் படங்களில் இம்மாதிரியான காட்சிகளைப் பார்த்திருக்கலாம். ஹீரோயினைக் காப்பாற்றுவதற்காக எம்.ஜி.ஆர் வில்லன்களிடம் சண்டையிடுவார். அவர்களும் கோயில் பிரசாதம் போல வரிசையாக வந்து அடிவாங்கிச் செல்வார்கள். ஹீரோவிற்கு அடிபட்டிருக்காது. என்றாலும் ஹீரோயினிடம் அனுதாபத்தைப் பெறுவதற்காக ‘அய்யோ. உடம்பெல்லாம் வலிக்குதே..’ என்று ஹீரோ புலம்புவார். அவருக்கு ஒத்தடம் தந்து வலியைப் போக்க முயல்வார் ஹீரோயின். இது அப்படியே டெவலப் ஆகி டூயட் ஆக மாறும். அந்தக் கனவுப் பாடல் கூட ஹீரோயின் பாயிண்ட் ஆஃப் வியூவில்தான் இருக்கும். ஹீரோ அப்படியெல்லாம் கனவில் கூட தவறாக நடக்க மாட்டார்.
விஷாலின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. பொம்மை டாஸ்க்கில் அவரை நாலைந்து பேர் தூக்கிப் போட்டு மிதித்ததில் உடம்பு வலியாம். உயிரைப் பணயம் வைத்து போராடியும் தர்ஷிகாவின் பொம்மையைக் காப்பாற்ற முடியவில்லையாம். மனம் வருந்துகிறாராம். எனவே விஷாலுக்கு ஒத்தடம் கொடுப்பது. மம்மு ஊட்டுவது, வாயைத் துடைத்து விடுவது, ‘ஜோ.. ஜோ’ பாடி தூங்க வைப்பது போன்ற சேவைகளை தர்ஷிகா செய்து கொண்டிருக்க “பார்க்கவே கண்றாவியா இருக்கு. என்னை எங்காவது குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விடுங்களேன். முடியல” என்பது போல பவித்ரா புலம்பிக் கொண்டிருந்தார். “யாருக்குத் தெரியும். அவர்கள் சிறந்த தம்பதிகளாக கூட வரலாம்” என்று சேஃப்பாக பேசிக் கொண்டிருந்தார் ஆனந்தி.
நள்ளிரவு. ‘அச்சமில்லை… அச்சமில்லை… ‘என்கிற பாடலைப் பாடிய படியே பிக் பாஸ் வீடெங்கும் தரையைத் தொட்டுக் கும்பிட்டபடி இருந்தார் சிவக்குமார். குடுகுடுப்பைக்காரன் மாதிரி நள்ளிரவில் இவர் பில்லி,சூன்யம் மாதிரி எதையோ செய்து கொண்டிருப்பதைப் பார்க்க நமக்குத்தான் கலவரமாக இருந்தது. சிவக்குமார் கீழே அடிக்கடி தொட்டுக் கும்பிடுவதைப் பார்த்தால் ரியாவின் ஆவி உள்ளே புகுந்திருக்குமோ என்று திகிலாக இருந்தது.
அப்பப்பா.. வீட்டிற்குள் எத்தனை விதமான கேரக்டர்கள்?!