Trump: 'டிரம்ப் பதவியேற்பதற்குள் வாங்க..' - வெளிநாட்டு மாணவர்களை எச்சரிக்கும் கல்லூரிகள்; காரணமென்ன?
டிரம்ப் பதவியேற்பதற்குள் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்து சேர்ந்துவிடுங்கள். இதை நீங்கள் சற்று தாமதம் ஆக்கினாலும், நீங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் வருவது பெரிய கேள்விக்குறியே என்று அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர்களுக்கு மெயிலாகவும், தங்களது வலைப்பக்கத்தில் போஸ்ட்டாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, வரும் ஜனவரி மாதம் அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார் டிரம்ப். அவர் பதவியேற்றதும், கல்வி தொடங்கி வெளியுறவு வரை பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாரத்தின் போது...
"நான் பதவியேற்றால் அமெரிக்காவிற்குக் குடியேறும் வெளிநாட்டினர் எண்ணிக்கையைக் குறைப்பேன். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். மேலும், சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டினரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவேன். அமெரிக்கா வரலாற்றிலேயே இது மிகப்பெரிய எண்ணிக்கையிலான வெளியேற்றமாக இருக்கும். இந்த வெளியேற்றத்திற்கு அமெரிக்க ராணுவம் பயன்படுத்தப்படும்" என்று தனது பிரசாரத்தின்போது டிரம்ப் கூறியிருந்தார். அவர் கூறிய தேர்தல் வாக்குறுதிகளில் இது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது.
கனடா, சீனா, மெக்சிகோ...
அதற்கேற்ற மாதிரி, தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, சமீபத்தில், சமூக வலைத்தளம் ஒன்றில், "அமெரிக்காவில் போதை மருந்துக் கடத்தல் மற்றும் சட்ட விரோத குடியேற்றத்தைத் தடுக்க கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்குக் கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும். சீனப் பொருட்களுக்கு இன்னும் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நான் பதவியேற்றதும் போடும் ஆரம்ப கையெழுத்துகளில் இது முக்கியமான ஒன்று" என்று பதிவிட்டிருந்தார்.
ஆக, பிரசாரக் காலத்திலிருந்து இப்போது வரை, அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதும், புதிதாகக் குடியேறுபவர்களைத் தடுப்பதும் தான் டிரம்ப்பின் குறியாக இருக்கிறது.
இதில் மாணவர்களுக்கு என்ன பிரச்னை?
அமெரிக்க உயர் படிப்பு குடியேற்ற வலைத்தளத்தின் படி, அமெரிக்காவில் கிட்டதட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் படித்து வருகின்றனர். அதாவது, அரசின் ஆவணங்களின் படி, அவர்கள் படிக்கும் மாணவர்கள் அல்ல. சட்ட விரோத குடியேற்றம் என்று வரும்போது, இவர்களும் அந்தக் கணக்கில் கணக்கிடப்படக்கூடும். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு டிரம்ப் முதன்முதலாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மாணவர்கள் விசா மீது பல கட்டுப்பாட்டுக்களை விதித்தார். இதனால், சில மாணவர்கள் அமெரிக்காவில் தங்களது படிப்பைத் தொடர சிக்கலைச் சந்தித்தனர். இந்த நிலை இப்போதும் ஏற்படலாம்.
கொஞ்சம் ஆறுதல்...
இனி அமையவிருக்கும் டிரம்பின் அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் ஒருவர், "வன்முறையை வளர்க்கும், தூண்டும் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வெளிநாட்டினரை வெளியேற்றுவதுதான் எங்கள் நோக்கமே தவிர, உயர் கல்வி பயிலும் மாணவர்களை அல்ல" என்று கூறியுள்ளது கொஞ்சம் ஆறுதலை அளித்தாலும், இன்னும் வெளிநாட்டு மாணவர்களுக்குப் பயம் தீரவில்லை.
கல்லூரி தரப்பு என்ன போஸ்ட்?
டிரம்ப் பதவியேற்பதற்குள் விடுமுறைக்குச் சொந்த நாட்டிற்குச் சென்றிருக்கும் மாணவர்கள் அமெரிக்கா திரும்பிவிட்டால் சில சிக்கல்களிலிருந்து அவர்கள் தப்பித்து விடலாம் என்று அமெரிக்காவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தரப்புகள் கூறி வருகின்றனர். சின்ன தாமதம் ஏற்பட்டாலும் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவது சந்தேகம் என்று எச்சரித்திருக்கின்றனர்.
2016-ம் ஆண்டு அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், இஸ்லாமிய நாடுகள், வட கொரியா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் குடியேறத் தடை விதித்திருந்தார். இப்போது, இதை மீண்டும் தீவிரமாகக் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார். இதற்காக, எதாவது சட்டத்தைக் கொண்டு வந்தால், மாணவர்கள் அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்புவதே சிரமமாகி விடும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...