1993ல் கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சேர்ந்ததன் ப...
சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பின் நிலைமை குறித்து நிவாரணம் அறிவிக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, மிதமாகவும், இடையிடையே பலத்த மழையும் பெய்தது. இதனால், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவது புதன்கிழமை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வயல்கள், குடியிருப்புப் பகுதிகளில் பெய்த மழை நீா் வடிந்து செல்வதற்கு எளிதாக இருந்தது.
தாழ்வான மற்றும் வடிகால் பிரச்னையுள்ள பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்தது. அம்மாப்பேட்டை, புத்தூா், அருந்தவபுரம், கம்பா் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 500 ஏக்கரில் சம்பா, தாளடி பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது. நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கு உட்பட்ட இளம் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள உக்கடை, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனும் ஆய்வு செய்தனர்.
விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்களிடத்தில் காண்பித்து, வாய்க்கால்களை தூர்வாரவும், உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தினர்.
இதையும் படிக்க |தொடர் கனமழை, அச்சுறுத்தும் புயல் : கோடியக்கரையில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய வேளாண் துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தன்மையை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து கணக்கீடு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் 947 ஹெக்டேர் அளவிற்கு நீரில் மூழ்கியுள்ளது. மழை விட்ட பிறகு தண்ணீர் வடிகின்ற நிலையை பொறுத்தும், 33 சதவீதம் அளவிற்கு பாதிப்பு இருந்தால் அதற்கு உரிய நஷ்ட ஈடுகள் வழங்குவதற்கு, அடிப்படை கணக்கீடுகள் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாயவரத்தில் 3300 ஹெக்டேர், நாகப்பட்டினத்தில் 7,681 ஹெக்டேர், ராமநாதபுரத்தில் 822 ஹெக்டேர், தஞ்சாவூரில் 947 ஹெக்டேர், திருவாரூரில் 958 ஹெக்டேர், திருவண்ணாமலையில் 35 ஹெக்டேர், கடலூரில் 500 அளவிற்கு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
பயிர்களின் பாதிப்பின் நிலைமையை பொருத்துதான் இழப்பீடு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.