வீடூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட விடுதி - சோதனையில் 47 பேர் கைது; ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்தில் சூதாட்ட விடுதிகள், இரவு பகலாக சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை, செம்மண், மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், அவர்கள் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் இருந்து வந்ததாக குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டியில் 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் மதுபானம், உணவு வசதியுடன் கூடிய சூதாட்ட விடுதியில் பணம் வைத்து சூதாடி வருவதாகவும், ஆர்ச்சம்பட்டி பகுதியில் சூதாடுவதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பைக்குகள் மற்றும் கார்களில் நபர்கள் வந்து செல்வதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி இடையூறுகள் , சமூக விரோத செயல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் சார்பில் தோகைமலை காவல் நிலையத்தில் பலமுறை புகார்கள் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இது குறித்து கொடுத்த தகவலின் பெயரில் கரூர் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில், நேற்று மாலை கரூர் மற்றும் திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 47 பேரை போலீஸார் கைதுசெய்து தோகைமலை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களை ஜாமீனில் போலீஸார் விடுவித்தனர். மேலும், அங்கிருந்த 15 பைக்குகள், ஒரு கார், ஆட்டோ மற்றும் ரூ. 5 லட்சம் பணம் ஆகியவற்றை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். தோகைமலை பகுதியில் சட்டவிரோத சூதாட்ட விடுதி நடந்து வந்ததாக கூறப்படும் நிலையில், கரூர் எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 47 பேரை கைதுசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.