விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்...
திருவாரூர்: `15 வருஷமா சாலை வசதி இல்ல' - முதல்வரின் சொந்த மாவட்ட மக்கள் வேதனை!
கடந்த சுதந்திர தினத்தன்று சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்றது திருவாரூர் நகராட்சி. ஆனால் அந்த நகராட்சியின் மையப்பகுதியிலேயே கடந்த பதினைந்து ஆண்டுகளாக முறையான சாலை வசதியில்லாமல் இருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் குறையாக உள்ளது.
திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது அழகிரி நகர், 700 குடும்பங்களுடன் சுமார் 2,800 மக்கள் வசிக்கக்கூடிய பகுதியாகும். இப்பகுதியில் சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றும் மழைக்காலங்களில் சகதியான சாலையிலேயே பயணிக்க நேரிடுகிறது என்றும் அப்பகுதி மக்களும், கட்சி பிரதிநிதிகளும் அரசையும், அரசு அதிகாரிகளையும் குற்றம்சாட்டுகின்றனர்
இது தொடர்பாக அழகிரி நகர் பொதுமக்களிடம் கேட்டபோது "எங்க பிள்ளை எல்லாம் சின்ன சிறுசா இருந்தப்போ இந்த ரோடு போடப்பட்டது. இப்படி மழை காலம் வந்தா இதுல வண்டி வாகனம் போக முடியாது... ஒரே ஒலையாய் இருக்கும் அதுலதான் நடக்கணும்! சில பேருக்கு சேத்துப்புண்ணு, அது இதுன்னு சீக்கு புடிச்சு படுத்துரும். இந்த பிரச்னை முத்தி ரோட்டுல போய் உட்கார்றதும், அப்ப திமுக-காரங்க பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைக்கிறதுமா இருக்கும்.
ஒரு முறை ரோட்ல ஒக்காந்தப்போ திமுக-காரங்க, `நாங்க இப்பதான் வந்தோம் இதுக்கு முன்னாடி வந்தவங்க ஒன்னும் ஸ்டெப் எடுக்கல... அதனால எங்களால ஒன்னும் ஸ்டெப் எடுக்க முடியாது'ன்னு பேச்சை நிறுத்திட்டு, கார்ல கிளம்பிட்டாங்க. ஓட்டு கேட்டு வாரப்ப மட்டும் `அத பண்றோம் இத பண்றோம்'னு சொல்லிட்டு போனாங்க... இப்ப எதுவும் பண்ணாம போறாங்க. இது எந்த விதத்துல நியாயம். இப்பகூட மண்டபத்துல வந்து தங்கிக்கங்க'ன்னு சொல்றாங்க, அவங்க கொடுக்குற ரொட்டிக்கும், பன்னுக்கும் பொழங்குன இடத்தை விட்டுட்டு வர்றதா! எதை செஞ்சாலும் எங்க இருப்பிலேயே பண்ணிட்டு போங்க, கஞ்சியோ... கூழோ... எங்க பொழப்ப இங்கேயே ஓட்டிக்கிறோம். இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் தான் நல்ல தீர்வு சொல்லணும்" என்று வேதனையுடன் கூறினர்.
மேலும் அப்பகுதியில் வசிக்ககூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர் குழு உறுப்பினர் சந்தோஷிடம் இது குறித்து கேட்டோம். ``இந்த அழகிரி நகர் பகுதி பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாகும். இங்கு சாலை போடப்பட்டு கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அரசுகளிடமும் அதிகாரிகளிடமும் சாலையினை சரி செய்து தருமாறு கோரிக்கையினை தொடர்ந்து வைத்து வருகிறோம்.
அவர்கள் தரப்பில் அப்போது சாலையினை கூடிய விரைவில் அமைத்து தர நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிவிட்டு செல்கின்றனர். இச்சாலை குறித்து வார்டு கவுன்சிலர் கமலாம்பாள் அவர்களிடம் நான் நேரடியாகவே பேசியது உண்டு. அவர் பாதாளச் சாக்கடை, மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் போன்றவற்றை காரணம் காட்டி இதனை தட்டிக் கழிக்கிறார். இதிலிருந்து பட்டியலின மக்களை வெறும் ஓட்டு வங்கியாகவே இந்த அரசு பயன்படுத்தி வருகிறது என்பது புலப்படுகிறது. இந்நிலையில் தான் திருவாரூர் நகராட்சிக்கு சிறந்த நகராட்சி என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேநிலை மேலும் நீடித்தால் இப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களை ஒன்று திரட்டி பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று கூறினார்.
இது தொடர்பாக அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் கமலாம்பாளிடம் பேசினோம். ``நான் பொறுப்பேற்று மூன்றாண்டுக்காலம் ஆகிறது. அழகிரி நகர் பகுதியில் பாதாளச் சாக்கடை இல்லாத காரணத்தால் சாலை பணி தடைப்பட்டது. தற்போது அரசு இசைந்து சென்ற மாதம் இத்திட்டம் வரப்பெற்றது. இருப்பினும் இப்பகுதி களிமண்ணால் சூழப்பட்ட பகுதியென்பதால் இப்பணியினால் மக்கள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, மழைக்காலம் முடிந்து பாதாளச் சாக்கடை பணி முடிந்த பிறகு, சாலை அமைக்கும் பணி நடைபெறும்" என்று கூறினார்.
இது குறித்து நகராட்சி ஆணையர் பிரபாகரனை தொடர்பு கொண்டு பேசியபோது, ``அழகிரி நகர் பகுதியில் பாதாளச் சாக்கடை, அம்ருத் 2.0 போன்ற திட்டங்கள் நிறைவடைந்த பின்பு புதிதாக சாலை அமைக்கப்படும். மேலும் இப்பகுதி சாலை தொடர்பாக அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் வந்த பிறகு துரிதப் பணி மேற்கொள்வோம்" என்று கூறினார்.
சிறந்த நகராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாரூரில், சேரும் சகதியுமாக மக்கள் இன்னல்படும் அளவுக்கு சாலை வசதி மோசமாக இருப்பது... சிறந்த நிர்வாகத்துக்கு அழகல்ல... எனவே அதிகாரிகள் இந்தப் பகுதியில் விரைந்து சாலை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது!