செய்திகள் :

தமிழ்ச் சமூகத் திருமணங்கள்: பொன் உருக்கு டு தாலி பெருக்குதல்... நாஞ்சில் நாட்டு வேளாளர் திருமணம்!

post image
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

அண்மையில் பணக்கார வீட்டு கல்யாணம் ஒன்றுக்கு   போயிருந்தேன். நகரத்தில் பெரிய கல்யாண மண்டபம். பின் வரிசையில் இருந்தேன். பேண்டு வாத்திய  சப்தம், திரும்பிப் பார்த்தேன்... நாலைந்து இளைஞர்கள் கலர் பட்டு துணியை உயரமாய் தூக்கிப்பிடித்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.

அந்தத் துணிப் பந்தலின் கீழே மாப்பிள்ளை... அவர் கையை மைத்துனன் பிடித்திருந்தான்.  மாப்பிள்ளையின் முன்னே  நாலைந்து இளம் பெண்கள் ஆடிக்கொண்டே போனார்கள். மெதுவாக ஊர்வலம் மணமேடை வரை இது நகர்ந்தது.

இந்த மண்டபத்திலேயே  இன்னொரு கல்யாணத்திற்குச் சென்றிருந்தபோது, மணமகன் பல்லக்கிலே வந்தார். சுற்றிலும் இசைக்கருவிகள் இசைத்தன.. நடன பெண்கள் ஆடினார்கள்.           இன்னொரு கல்யாண வீட்டில் மாலை வரவேற்பு முடிந்ததும்  மணமேடை அருகே  குத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் ஆடினார்கள்.  மணப்பெண் கூட ஆடினாள். இன்னொரு வீட்டில்  மெஹந்தி சடங்கை  விமர்சையாய்  கொண்டாடினார்கள்.

திருமணம்

இதுபோன்ற  சினிமா காட்சிகள்  இன்று பெருகி வருகின்றன.  இவை  பழைய மரபு வழியான  பல சடங்குகளைத் துரத்தி விட்டன. திருமணம் என்பது ஆண் பெண் சேர்க்கை மட்டும் அல்ல. இதில் பொருளாதார கொடுக்கல் வாங்கலும் அடங்கும்.    திருமணத்திற்குப் பின்னர் நடக்கும் சடங்குகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகளும்,  தொடரும் உறுவுகளின்  தொடர்புகளுக்கு  இவை காரணிகள். இந்தப்   பொதுவான  மானிடவியல் கொள்கை ஒரு காலத்தில் வேளாளருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

நாஞ்சில் நாட்டு வேளாளர் - தாய் வழி சமூகத்தினர்

இவர்களுடையது மருமக்கள் வழி முறை. இந்த முறை 1924 ல் நிறுத்தப்பட்டாலும், மனரீதியாக இன்னும் சிலரிடம் போகவில்லை. பொதுவாகத் தந்தை வழி சமூகத்தில் பெண்ணை எடுத்தல் என்றும் தாய் வழி சமூகத்தில் மணமகளைப் பெறுதல்  என்றும் சொல்லப்படும். இரண்டாவது முறை நாஞ்சில் வேளாளர்களுக்கு உரியது. இதன் எச்சத்தைச் சடங்குகளின் வழி இன்றும் இவர்களிடம் பார்க்க முடியும்.

வேளாளர்கள், எந்த உறவுகளுடன் மணம் செய்யலாம் என்பதற்கு வரையறை உண்டு. இவர்களில் மாமா என்பவர் தந்தையைப் போன்றவர்.  இவரே பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்க உரிமை உடையவர். இதனால் மாமா, மருமகளை மணம் செய்வது இங்கு கற்பனை செய்ய முடியாத ஒன்று.

பொதுவாக திருமணச் சடங்குகளில் ஏற்பட்ட மாற்றங்களை, `திருமணம் வீட்டில் நடந்த காலம்’, `கல்யாண மண்டபங்களில் நடக்கும் காலம்’ என்று பிரித்துக் கொண்டு பார்க்கலாம். வீட்டின் முற்றத்திலோ தெருவிலோ நடந்த காலத்தில் சடங்குகள் பெரும்பாலும் மரபு வழியே நடந்தன. மண்டபங்களில் நடக்க ஆரம்பித்த போது, சடங்குகள் சுருங்கின. சினிமாத் தன்மையுடன் மாறவும் ஆரம்பித்தன, சில நின்று விட்டன.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்த பின்னர் நடக்கும் முதல் நிகழ்ச்சி, திருமணம் உறுதிப்படுத்தல் (இது ஸ்திரப்படுத்தல் எனப்படும்). முந்திய காலங்களில் மிகச் சிலரே இதை நடத்தினர். இப்போது  இது தனி நிகழ்ச்சியாகி விட்டது. இதில் சடங்குகள் ஏதுமில்லை. இந்த நிகழ்வில் பெரியவர்கள் பெண்ணுக்கு திருநீறு பூசுவது வழக்கம் அண்மையில்  உருவானது.

திருமணம் உறுதிப்படுத்தும் நிகழ்வில்  நிச்சய தாம்பூலம்,  தாலிக்கு பொன் உருக்கு, உடன் மறுவீடு,  சட்ரசம் பரிமாறுதல், மறு வீடு, சாந்தி முகூர்த்தம் போன்ற நிகழ்வுகள் நடக்கும் நாட்களும் நேரமும் ஜோதிடரின் உதவியுடன் முடிவு செய்யப்படும்.

அடுத்தது  நிச்சயதாம்பூலம் நிகழ்வு (  நிச்சியார்த்தம்). முந்திய காலங்களில் பெண் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாக இது இருந்தது. இப்போது மாப்பிள்ளை பெண் இருவருமே கலந்து கொள்கின்றனர்.

நிச்சியதாம்பூல  நிகழ்வில் மாப்பிள்ளை பெண்ணுக்கு மோதிரம்   அணிவிப்பதும் ஒன்றாக இருப்பதும் சாதாரணமாகிவிட்டது.  நிச்சயதாம்பூலத்தில் திருமண உறுதி பட்டோலை (சார்த்து) வாசிப்பது ஒரு நிகழ்வு. இதை ஜோதிடரோ அல்லது உறவினர் ஒருவரோ செய்வார்.

பழ வகைகள் அடங்கிய இரண்டு தட்டுகளிலும் பட்டோலை தாள்   வைக்கப்பட்டிருக்கும். மணமக்களின் வீட்டாரில் மூத்தவர்கள் இந்தத் தட்டை  மாற்றிக் கொள்ளுவர். இதற்கு முன்பு  மூன்று   செங்கல்களை வைத்து மண் சாந்து பூசி சந்தனம் குங்குமம் வைப்பார். ஆலமர கொம்பு ஒன்றில் வெற்றிலைக் கட்டி அதற்கும் சந்தனம் பூசுவர். இதை வயதில் மூத்த ஒருவர் செய்வார்.

திருமணம் முடிந்த பின்பு  இந்த மரக்கம்பு ஊரின் எல்லைப் புறத்தில் நடப்படும்.  இப்போது பெரும்பாலும் சார்த்து வாசித்து  தட்டம் மாற்றுவது மட்டுமே சடங்காக நடக்கிறது.

தாலிக்குப் பொன்னுருக்கு என்ற  சடங்கு   தாலிக்குரிய  தங்கத்தை  ஆசாரி  உருக்கும் நிகழ்வு. இது மாப்பிள்ளை வீட்டிலேயே நடக்கும். இந்தச் சடங்கை  பொற்கொல்லரே நடத்துவார்.  மாப்பிள்ளையின் சகோதரி  தாலிக்குரிய  தங்கத்தைக்  கொடுக்க வேண்டும் என்பது நடை முறை.

மஞ்சள் வெற்றிலை பாக்கு பழம்  தேங்காய்  பூ குங்குமம்  மரச் செப்பு ஆகியவற்றைப் பெரிய தட்டத்தில் வைத்து பொற்கொல்லரிடம் மாப்பிள்ளையின் சகோதரி கொடுப்பார்.  இதில் தாலிக்குரிய தங்கம் இருக்கும். ஆசாரி (பொற்கொல்லர்) தங்கத்தை  உருக்கிய பின் அதற்குக் கற்பூரம் காட்டுவார். இந்த நிகழ்வில் மணமகன் கலந்து கொள்ளக்கூடாது.

பொன்னுருக்குதல்

உத்தேசமாக 1965 க்கு முன்  திருமண நிகழ்வு எல்லாம் வீட்டின்   முற்றத்திலோ வீட்டின் முன் பகுதியிலோ தெருவிலோ நடந்தது.  திருமணம் நடக்கப் போகிறது என்பதன் அடையாளம், வீட்டின் முன் பகுதியில் உள்ள ஓலை கொட்டகை. விருந்தினர்களின் சாப்பாடு கூட இங்கே தான் நடக்கும். தரையிலே அமர்ந்து சாப்பிடுவதில் யாருக்கும் தயக்கம் இல்லை.

கல்யாணம் தொடங்குவதற்கு சில நாள்கள் முன்பே, ஒரு நல்ல நாளில் மஞ்சள் இடிப்பது  ஒரு சடங்காக நிகழும்.  இதை சுமங்கலிகள் செய்வார்கள்.  பலசரக்குச்   சாமான்களை  மொத்தமாக  வாங்கி இடித்து தயார் செய்கின்ற வேலையை ஊர்க்காரர்கள், சமூகத்து ஆள்கள் செய்வார்கள். 

பலசரக்கு பொடி வராத காலம்,  கிரைண்டர் மிக்ஸி இல்லாத காலத்தில் திருமணத்திற்கு முந்திய நாள் காய்கறிகளை வெட்டும் வேலையை ஊரில் உள்ள ஆண்கள் செய்தார்கள். இதற்காக அவர்களைத் தனியே அழைப்பார்கள். பெரும்பாலும் இந்த வேலையை ஊர் நிர்வாகப் பணியாளரான `மொறையான் பிள்ளை’ என்பவர் செய்வார். சமையல் வேலையை கூட  ஊர் மக்களில் சிலர்  வலிந்து ஏற்றுக் கொள்வார்கள். சமையல்காரர்கள் அறிவுரையின் பேரில் ஊர் மக்களில் சமையல் தெரிந்தவர்கள்  இரவு முழுக்க சலிக்காமல் இந்த வேலையைச்  செய்வார்கள்.

இப்போது எல்லாம் மாறிவிட்டது. கல்யாண மண்டபங்களில்  திருமணம் நடக்க ஆரம்பித்த காலத்திலேயே ஊர் மக்களுக்கும் கல்யாணத்திற்கு உள்ள உறவு நிற்க ஆரம்பித்தது.  இன்றைய நிலையில்  எல்லா காரியங்களையும் செய்வதற்குக்   குத்தகைக்கார்கள்  வந்துவிட்டார்கள். கல்யாண பெண்ணின் தந்தை கூட மற்றவர்களைப் போலவே  சாதாரணமாக கல்யாண நேரத்துக்கு வருகிறார்.

கடந்த 50 வருஷங்களில்  கல்யாணம் என்பது கோலாகல நிகழ்ச்சி ஆகிவிட்டது. பல சடங்குகளும் நின்றுவிட்டன. ஊர்மக்கள், சமூகத்துகாரர்கள், உறவுக்காரர்கள் ஆகியோரின்  பங்கு கல்யாணத்தில் இல்லாமல் ஆகிவிட்டது. திருமண மண்டப மேனேஜர்  புகைப்படக்காரர், ஒப்பனை செய்யும் பெண்  சமையல் ஒப்பந்ததக்காரர்  இவர்களின் ஆதிக்கம் கல்யாணத்தை ஆட்டிப்  படைக்கிறது.

கல்யாணத்தில்  மனித உறவுகளுக்கு உள்ள அன்னியோன்யம் குறைய ஆரம்பித்து விட்டது. எல்லோரும் அன்னியமாகிவிட்டனர்.  `இப்போது இங்கே உறவுகளின் மத்தியில் ஊர் மக்களின்  செயல்பாடுகளில் நடப்பது அல்ல திருமணம்’ என்பதை ஒவ்வொரு கணமும் பார்க்க முடிகிறது. வேளாளரின்  கல்யாணத்தில் அதிகாலையில் நடந்த கதிர் குளித்தல் என்ற சடங்கு  இப்போது நடப்பதில்லை.  சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் அறம் வளர்த்த நாச்சியார்  திருக்கல்யாணத்தில் ஒரு சடங்காக மட்டுமே இது  நடக்கிறது.

திருமணம்

திருமணத்தன்று அதிகாலையில் சூரியன்  உதயமாகும் முன்பு ஊர் தெப்பக்குளம் அல்லது பொதுக்குளத்தில் மணப்பெண் கிழக்கே பார்த்து நின்று சூரியனை வணங்கும் காட்சி என்பது சடங்காக நடந்தது. அப்போது சில வீடுகளில் இதற்காகப் பல்லக்கில் வருவார்கள். சூரியக்கதிரை முதல் முதலில் தரிசித்தல் என்பது இதன் அடையாளம். முன்பு, பெண் பருவமடைந்த பின்னர்  திருமணத்தன்றுதான் வெளியே வருகிறாள் என்பதன் அடையாளம்.

மணமகனை மண மேடைக்கு அழைத்து வருதல் கூட ஒரு சடங்கு.  இப்போது  அது மற்ற சடங்குகளைப் போல் ஒப்புக்காக நடக்கிறது. திருமண மண்டபத்தில் வேறு ஒரு அறையில் இருந்து மண்டபத்தைச் சுற்றி  நாதஸ்வர மேளம் முழங்க பெண்கள் மாங்கல்ய பொருள்களைப் பெரிய தட்டுகளில் ஏந்தி வர,  மணமகன் உடன் வருவார். இவரை அழைக்கும் உரிமை மணமகனின் சகோதரன் முறை உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது.

தட்டுகளில் பழம் பாக்கு வெற்றிலை ஆகியவற்றை மட்டும் கொண்டு செல்வது என்று  முறை மாறிவிட்டது. இன்று பேர்த்தம்பழம்(பேரீச்சம்பழம்), முந்திரிப் பருப்பு, கொக்கோ சாக்கிலேட் உட்பட எல்லா பொருட்களையும்  தட்டுகளில் கொண்டு செல்வதால் கல்யாண மேடைகளில் இளம் சிறுமிகளின்  எண்ணிக்கை மிகுந்து விட்டது.  அவர்கள் ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் என்ற நியதியும் இப்போது இல்லை.

மாப்பிள்ளை   மண்டப வாசலில் வந்தவுடன் மைத்துனன் முறை உள்ளவன், மணமகனின்  பாதங்களைத்   தண்ணீரால் கழுவ வேண்டும். மணமகன் மைத்துனனுக்குத்  தங்க மோதிரம்  அணிவிப்பார். இந்த வழக்கம் இன்னும் மாறவில்லை. மணமகன் மணமேடைக்கு  வரும்போது மணமகளின் அத்தையின் மகன் வழிமறிப்பான். அந்தப் பெண் தனக்கே உரியவள் என்பதன் அடையாளம் அது. அப்போது மாப்பிள்ளை அந்த முறை பையனை சமாதானப்படுத்தி விட்டு முன்னே செல்லுவார். இந்த நிகழ்ச்சி நடைமறித்தல் எனப்பட்டது.   இப்போது முழுக்கவும் இது நடைமுறையில் இல்லை.

நெருப்பு வளர்த்து சமஸ்கிருத மந்திரம் சொல்லி தாலிகட்டும்    வழக்கம் இவர்களிடம்  இன்றும் தொடர்கிறது.  மிக மிக அபூர்வமாகச் சிலர் தமிழ்ப் பாடல்களைப் பாடி திருமணம் செய்கின்றனர். மணமேடையில் தேங்காய் பழம் வெற்றிலை அடங்கிய தட்டுகளும், நெருப்பு வளர்ப்பதற்குரிய இரும்புச்சட்டியும் முளைப்பாரிக்குரிய மண்சட்டியும் இருக்கும்.

மணமேடையில்  மணப்பெண் அமர்ந்ததும் அவளது தந்தை இடதுபுறம் அமர்ந்து அவளுக்குத் திருநீறு பூசி ஆசிர்வாதம் செய்வார்.  இதன் பிறகு பெண்ணின் தாய் மாமா மேடையிலே அமர்ந்து சில சடங்குகளைச் செய்வார். மணமேடையில் வைக்கப்பட்டிருக்கு சிறிய  முளைப்பாரி  சட்டிகளில்,  நவதானியங்களைப்போடுவகர். அதில் பால் அல்லது தண்ணீரைத் தெளிப்பார். இந்தச் சடங்கு கலப்பரப்பு கொடுத்தல் எனப்படும்.

திருமணச் சடங்கை நடத்தும் குருக்கள் (சைவ வேளாளர்) அல்லது பிராமணரின் அறிவுரைப்படி மணமேடையில் உள்ள  எல்லா சடங்குகளும் நடக்கும்.  பின்னர்  தாய் மாமா  மஞ்சள் தோறு  கட்டப்பட்ட மஞ்சள்  நூலை மணமகளின் வலது கையில்  கட்டுவார்.

இதன்பின் மணமகள் மேடையை விட்டு இறங்கி, அவளது அறைக்குச் செல்வார். பின் மேடையில் மணமகன் அமரவார்.
அப்போது மணமகனின் தாய் மாமா அவன் கையில் மஞ்சள்தோறு கட்டப்பட்ட மஞ்சள் நூலைகட்டுவார் (இது காப்புக்கட்டுதல் எனப்படும்). பின் மணமகள் வந்து  மாப்பிள்ளையிடம்  முகூர்த்த பட்டை வாங்கிச் செல்லுவார்.

மணப்பெண் முகூர்த்தப் பட்டை உடுப்பதற்காகச் செல்லும் நேரத்தில் மாப்பிள்ளைக்கு உறுமா கட்டும் நிகழ்ச்சி நடக்கும்.   உறுமா என்பது  100 சென்டிமீட்டர் நீளமுள்ள வண்ண நிறமுடைய  துணிதான்.  இது கடந்த 50 ஆண்டுகளில் வந்த புதிய பழக்கம்.   நான் எண்பதுகளில் 90  வயதான   தமிழ் அறிஞர் ஒருவரிடம்  இது பற்றி கேட்டபோது, தாய் மாமா மட்டும் தான் மாப்பிள்ளைக்கு ஈரிழைத் துவர்த்து (சிறிய துண்டு) ஒன்றைக் கட்டுவார்.  இது உறுமா எனப்படும்.  வாயில் கம்பெனி பரவலான பிறகு பெண்கள் வண்ண நிறங்களில் ரவிக்கை போட ஆரம்பித்தனர். பிறகு இது புதிய சடங்காக வளர்ந்து விட்டது என்றார்,

இப்போது அரசியல் தலைவர்களுக்குத் துண்டு போடக் காத்திருக்கும் கட்சிக்காரனைப்  போல உறுமா கட்டுவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். சில சமயம் முகூர்த்த நேரம் நெருங்கி விட்டால் உறுமாவை மாப்பிள்ளையின் கையிலே கொடுத்துவிட்டு வேகமாக ஓடிச் செல்லும் காட்சி இப்போது சாதாரணமாகிவிட்டது.

தேங்காய் பழம்  வைக்கப்பட்டிருக்கும்  தட்டத்தில் தாலியை வைத்து  பெரியவர்களிடம்  ஆசி வாங்குவது  என்னும் செயல் இன்றும் நடைமுறையில் உள்ளது.  பெண்ணுக்குத் தாலியைக் கட்டும் உரிமை  மணமகனின் சகோதரிக்கு மட்டுமே உரியது.  அம்மாவும் கட்டலாம். தாலி கட்டும்  சுமங்கலி  மணமேடையில் உள்ள  நான்கு கால்களிலும் சந்தனம் வைத்துவிட்டு  தன் தாலியை  முதுகுக்குப் பின்னே போட்டுவிட்டுத் தான்  தாலி கட்ட வேண்டும். ஒரு தாலி  இன்னொரு தாலியைப் பார்க்கக் கூடாது.   வேளாளரின் தாலி பிள்ளையார் தாலி எனப்படும்.

தாலி கட்டு நிகழ்ச்சி முடிந்ததும் பெண்ணின் தந்தை மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவார். இது கைப்பிடி மோதிரம் எனப்படும். பின்னர் மணமகனின் உள்ளங்  கையில் ஒரு ரூபாய் நாணயத்தையும் வெற்றிலையும் வைத்து மணமகளின் வலது கையை அதன் மேல் வைத்து சிவப்பு துணியால் கட்டுவார். அந்தக் கட்டோடு அவர்கள் மணமேடையைச் சுற்றிவர வேண்டும். அப்போது சிறுமிகள் விளக்கு மணி போன்ற மங்கல  பொருட்களை எடுத்துக்கொண்டு மணமேடையை மூன்று முறைசுற்றி வருவார்.

தாலி கட்டு நிகழ்ச்சி முடிந்ததும்  மணமக்கள் மணமகனின் வீட்டுக்குச் செல்வது, அதாவது உடன் மறுவீடு  என்ற நிகழ்ச்சி நடக்கும். இதில் மணமக்கள் மணமகனின் வீட்டிற்குச் சென்று, பாலும் பழமும் குடித்துவிட்டு, மணமகள் அந்த வீட்டு அடுக்களையில்  (சமயலறை) புளியையும் உப்பையும் தொட வேண்டும். இதுவும் ஒரு சடங்கு.

திருமணத்தன்று பகல்  மணமகள் மணமகனுக்கு உணவு   பரிமாறுதலும் ஒரு சடங்கு (இது சட்ரசம் பரிமாறுதல் எனப்படும்). அவள்  மாப்பிள்ளையின் அருகிலே அமர்ந்ததும் மணமகன் பருப்பு சோற்றில் ஒரு மோதிரத்தை வைத்து அவளது இலையில் வைப்பான்.

முந்திய காலங்களில்  வீடுகளில் திருமணம் நடந்த போது மாலை நேர சடங்கு என்பது எழு மணிக்கு தான் ஆரம்பமாகும்.  இதில் மணமகளும் மணமகனும் நலுங்கு உருட்டுவது, பெண் மாப்பிள்ளையின் தலையில் சுட்ட பப்படத்தைப்(அப்பளத்தை)  பொடித்து போடுவது என்ற   நிகழ்ச்சிகள்  நடக்கும்.

இது முடிந்ததும் நாலாம் நீர்ச் சடங்கு  ஆரம்பமாகும். மணமகனும் மணமகளும் மணமேடையில்  அமர்ந்து  ஒவ்வொருவரும் மாறி மாறி தலையிலே எண்ணையைக் தொட்டு வைப்பது  முதல் சடங்கு. மணமக்கள் இருவரும் குளித்துவிட்டு புதிய ஆடை அணிந்து மணமேடையில் அமருவார்கள். அப்போது பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய சீர்வரிசையை(வெள்ளிப் பாத்திரங்கள்) மேடையிலே வைப்பார்கள்.   உறவுமுறைகாரர்கள் மாப்பிள்ளைக்கு மொய் எழுதுவார்கள். இது சுருள் கொடுப்பது  எனப்படும்.  சுருள் கொடுப்பதிலும் நியதி உண்டு. யார் என்ன கொடுத்தார்கள் என்பதை எழுதி வைக்கும் பழைய வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

மேடையில் வைக்கப்பட்டிருக்கும் முறுக்கு போன்ற பலகாரங்களை உறவினர்களுக்கு அப்போதே பரிமாறி விடுவார்கள். இதன் பிறகு  நடக்கும் சாப்பாட்டில்   தீயல் குழம்பு(வறுத்த குழம்பு) கட்டாயம்   இருக்க வேண்டும்.  மாப்பிள்ளையின்  அக்காவே  மணமக்களை  சாந்தி முகூர்த்த  அறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது அவளது  உரிமைகளில் ஒன்று.


அடுத்த நாள் காலையில் நடக்கும் ஏழா நீர் சடங்கு பெரும்பாலும் மணப்பெண்ணின்  வீட்டில்  நடக்கிறது.   அபூர்வமாய்  சிலர் திருமண மண்டபத்திலேயே நடத்துகின்றனர். முந்தைய காலங்களில் உறவுமுறைக்காரர்களில்,  குறிப்பாக அத்தான் கொழுந்தி உறவுமுறை உடையவர்கள், மஞ்சள் தண்ணீரை மாறி மாறி மேலே  ஊற்றிக் கொள்வது  ஒரு நிகழ்ச்சியாக இருந்தது.  சிறு மனப்பூசல் கூட இந்த நிகழ்வின் மூலம் மாறிவிட வாய்ப்பிருந்தது.


ஏழாம் நீர் சடங்கில்  மணமகள்  பொங்கல் விடுவது முக்கியம்.  இன்னும் இது  தொடருகிறது.   முந்தின நாள் உள்ள கறி வகைகளில்  அவியல் தோட்டல்  சாம்பார் போன்றவற்றைக்   கொதிக்க வைத்து பழங்கறி  தயாரிப்பது கூழ் காய்ச்சுவது  என்பதெல்லாம் இன்று நடைமுறையில் இல்லை.

மணப்பெண்  பொங்கல் விட்ட பின்   பிள்ளை மாற்று சடங்கு  நடக்கும்.  மணமக்களின் கையில் கட்டப்பட்டிருக்கும் காப்பைதாய் மாமா அறுத்து எடுப்பதும் ஒரு சடங்கு. மணமக்கள் தரையில்அமர்ந்ததும் பிள்ளைமாற்றுச் சடங்கு நடக்கும். மணமகள் மடியில் ஒரு பொம்மையை வைப்பார். முந்திய காலங்களில் இதற்கென்றே  மரப்பாய்ச்சி உண்டு.   இப்போது உறவினர்கள் மணமகளுக்கு சுருள் வைப்பர் ( மொய் ) இந்தப் பணம் மணமகனுக்கு.


சாந்தி முகூர்த்தம் நடந்த அறையில் மணமக்கள் படுத்திருக்கும்  கட்டிலின் கீழ்  மண மேடையில் இருந்த முளைப்பாரியைத்  தண்ணீர் தெளித்து வைப்பார்கள்.  எட்டாவது நாளில் இதை ஆற்றில் அல்லதுகுளத்திலேயே கொண்டு கரைத்து விடுவார்கள். இதே நாளில் மணமகளின்  நூல் தாலியைத் தங்கச் சங்கிலிக்கு மாற்றுவார்கள். இதிலும் மாப்பிள்ளையின் சகோதரிக்கு உரிமை உண்டு. இப்படி மாற்றும் போது மணமகனின் சகோதரி  தன் தாலியை மறைத்து  வைக்க வேண்டும்.  இது தாலி பெருக்குதல் எனப்படும்.

திருமணத்தின் கடைசி  நிலையாக தாலி பெருக்குதல் சடங்கை கொள்ளலாம்.   மாப்பிள்ளையின் வீட்டில்  விளக்கின் முன்னே நடக்கும் சடங்கு நிகழ்ச்சியில்  பெண் வீட்டில் இருந்து மிகச் சிலர் கலந்து கொள்ளுவார்கள். தாலி பெருக்கியதும்  பாயாசம் சகிதம் சாப்பாடு உண்டு.

வேளாளர்களின் திருமணச் சடங்குகளை வழிநடத்துவதற்கென்றே வயதான பெண்கள், ஆண்கள் என சிலர் இருந்தார்கள்.  இவர்களைத் திருமணத்திற்குத் தனியாக அழைப்பது என்பது ஒரு சம்பிரதாயமாக  இருந்தது.   இந்த  ஆட்களின் காலம் 90களில் முடிந்து விட்டது. அடுத்த தலைமுறையினரில் அப்படி யாரும் உருவாகவில்லை.

மணமேடையில் சடங்கை நடத்தும் பிராமணரே சில இடங்களில்  திருமணச் சடங்குகளை வழிநடத்துகிறார். இதனால் சில சடங்குகள் மரபு வழியில் இருந்து நீங்கி மேல்நிலையாக்கம் பெற்று வருகிறது.   சில சடங்குகள் நின்று போய்விட்டன.


நாஞ்சில் நாட்டுக்கு வெளியே  சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் வாழ்கின்ற இந்த சமூகத்தினர் நடத்தும் திருமணங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.  திருவனந்தபுரம் வேளாளர்களின் சடங்குகளில் மலையாள பாதிப்பை நிறையவே காண முடிகிறது. நாயர் சமூக மக்களின் பாதிப்பைக் கேரள வேளாளர்களிடம் வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

எதிர்காலத்தில்  இவர்களின் திருமணம் தொடர்பான சில கட்டுரைகளும்  எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் நாஞ்சில் நாட்டு வேளாளர் பற்றிய புத்தகமும்  வேளாளர்களின்  திருமண ஆல்பங்களும் மட்டும்தான் இவர்களின்  திருமணச்  சடங்குகளின் எச்சமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

- அ.கா பெருமாள்

Wedding Plan: செலிபிரட்டி ஆடைகளை உங்கள் திருமணத்திற்கு ரீ-கிரியேட் செய்யலாமா?!

எல்லாருடைய வாழ்விலும் கொண்டாட்டம் மிகுந்த திருநாள் 'திருமண நாள்'. அந்தத் தினத்தில் மணமக்கள் சம்பந்தப்பட்ட எல்லாமே சிறப்பாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். திருமண ஆடை சரியாக அ... மேலும் பார்க்க

``அந்த நாளும், மகிழ்ச்சியும்... அப்படியே இருந்திருக்கலாம்'' - குடும்ப தலைவியின் பகிர்வு| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

`எனக்கு அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும்...' - 4 நாள்கள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், மகன்!

தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (59). இவரது மகன் ராகுல் (29), இவர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்து வந்தார். 17 வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் கணவர் இறந்து விட்டா... மேலும் பார்க்க